என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 குழுமத்தின் சார்பில், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் பிரபலங்கள் பங்கேற்றுள்ள டவுன்ஹால் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மக்களிடையே விதைக்கப்படும் நல்ல கருத்துகள்தான், முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமையும். அப்படி, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் கொள்கை முகமாக 75 ஆண்டுகள் கடந்த மாபெரும் அரசியல் இயக்கமாக, மக்களின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கத்தின் எதிர்காலத்திற்கான திசைகாட்டியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களை வழங்கியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று, வன்முறை தவிர்த்து, வறுமையை வெல்வோம். திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பை ஏற்கும் போதெல்லாம் இதை மனதில் வைத்துதான் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஒரு தரப்புக்கான வளர்ச்சி இல்லை. எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சி. பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரையும் Empower செய்யும் Politicsயை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.
பா.ஜ.க.வின் Pattern என்ன என்று தி.மு.க. மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்களின் அரசைக் கொண்டுவரப் பயன்படுத்திக்கொண்ட வாஷிங் மெஷினை, இங்கும் கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்களின் என்டிஏ கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான்.
எல்லாருக்கும் எல்லாம், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அனைத்துத் துறை வளர்ச்சியுடன் அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்த வரைக்கும், சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம், மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்கள் குறித்து இந்தியா முழுவதும் ஒரு பரந்துபட்ட பார்வை உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம்.
அதுதான், இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பாதையைக் காட்டுவதற்கான ஒளியாகதான், திராவிட மாடலை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். இந்தப் பணியிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நான் மக்களை நம்புபவன். மக்களுக்கான எங்களின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ்நாட்டில் நிச்சயமாக பல முனைப் போட்டிகள் இருக்கலாம். ஆனால், பலம் பொருந்திய போட்டியாக இல்லை. தலைவர் ஒருமுறை ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.