சென்னை : 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேலைகளில் திமுக தீவிரம் காட்ட துவங்கி உள்ளது. திமுக சார்பில்
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விருப்பமனுக்களை பூர்த்தி செய்து மார்ச் 02ம் தேதிக்குள் தலைமை கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மற்றொரு புறம்,
திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 7 பேர் குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளார்கள் என்ற அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார். பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. தலைமைக் கழகம் அமைத்துள்ள குழு விபரம்:
குழு தலைவர் : கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு
குழு உறுப்பினர்கள் :
1. கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர், தி.மு.க.)
2. திருச்சி சிவா (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க..)
3. ஆ. இராசா (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.)
4. ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க. அமைப்புச் செயலாளர்)
5. எ.வ. வேலு (தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
6. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
வழக்கமாக ஒரு கட்சி, கூட்டணி வருகிறது என்றால் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்த பேச்சுவார்த்தை துவங்கும் போதே அவர்களுக்கு எத்தனை தொகுதிகள், அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி உண்டா இல்லையா, அமைச்சரவையில் இடம் தரப்படுமா, அப்படியே தந்தால் எந்தெந்த துரைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு, எல்லாம் ஓகே என முடிவானால் மட்டுமே கூட்டணி அமைக்கலாம் என முடிவெடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வெறும் வாய் வார்த்தையாக கூட்டணி என பேசி விட்டு விட மாட்டார்கள். அப்படி பேசி முடிவு செய்தால், பிறகு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது அதிக இடங்களை கொடுத்தால் தான் கூட்டணியில் இருப்போம். இல்லையென்றால் வெளியேறி விடுவோம் என கூட்டணி கட்சிகள் அழுத்தம் தர வாய்ப்புள்ளது என்பதால் இதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி மிக எச்சரிக்கையாக இருக்கும்.
அப்படி பார்த்தால்
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளிடமும் ஏற்கனவே யார் யாருக்கு எத்தனை தொகுதி என திமுக பேசி ஃபைனல் செய்து விட்டது. அப்படி இருக்கும் போது இந்த 7 பேர் கொண்ட குழு எதற்கு? இவர்கள் கூட்டணி கட்சிகளுடன் என்ன பேசுவார்கள்? என்ற கேள்வி அனைவருக்கும் வரும். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் பேசி, கூட்டணி குறித்த அனைத்து விஷயங்களை இறுதி செய்வார்கள் இவர்கள். முதல் கட்டமாக நாளை காங்கிரஸ் கட்சியுடன் இந்த 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 7 பேரும் திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுடனும் தனித்தனியாக பேசி அவர்களின் கோரிக்கை, மனவருத்தங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றை பேசி, தெளிவுபடுத்தி, சரி செய்து, கூட்டணியை இறுதி செய்து, பலமானதாக மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது.
{{comments.comment}}