புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!

Su.tha Arivalagan
Aug 14, 2026,10:43 AM IST

- எம்.கே.திருப்பதி


புராணங்கள் நிறைந்தது 

பண்டைய பாரதம் 


விரோதங்கள் நிறைந்தது

இடைக்கால பாரதம் 


துரோகங்கள் நிறைந்தது

பதினைந்தாம் நூற்றாண்டுக்கு

பிந்தைய பாரதம்!


அன்னியர் அநியாயத்தில் 

ஆலயமும் தப்பவில்லை

ஆண்டவனும் தப்பவில்லை!


மனிதம் விளைந்த மண்ணில்

மதத்தை விதைத்தனர்!

மதம் மாறா மகான்களை 

மதத்தைச் சொல்லி - அவர்கள் 

மணிக் கழுத்தை அறுத்தனர்!


தொல்குடி 

தொய்ந்து போனது!

நாள்பட்ட துணியாய்

நைய்ந்து போனது!




அனைத்துக்கும் மோசமாக 

ஐரோப்பிய படையெடுப்பு 

ஆட்டங்காட்டியது!


நரியின் தந்திரம் போல் 

நாலா புறமும் 

நஞ்சை ஊட்டியது!


வாளுக்கு வதைப் பட்டவன் 

துப்பாக்கிக்கு 

துளைப் பட்டான்!  

அய்யகோ!

விதிக்கு விலைப் பட்டான்!


காலங்கள் 

கடக்க கடக்க 

உப்புக்கு வரி கேட்டான் 

துப்புக் கெட்டவன்!


காந்தியாரின் 

தண்டி யாத்திரை

தகிக்க வைத்தது

பாரத தேசத்தை!


உத்தமனின் 

உப்புச் சத்தியாகிரகம் 

கவனிக்க வைத்தது

சர்வதேசத்தை!


வீட்டுக்கு வீடு

விடுதலை நெருப்பு

வீரியமாக வீசியது!

சிறுபிள்ளை கூட

சிங்கம் போல் 

சினந்து சீறியது!


இந்தப் பக்கம் 

வாஞ்சிநாதன்

ஆஷை அழித்தான்! 

அந்த ஆஷின் 

ஆசை அழித்தான்!


ஜாலியன் வாலாபாக்கில்

கோலியால் கொல்ல 

உத்தரவிட்டவனை...


அவன் 

தாய் நாட்டில் புகுந்து

உத்தம் சிங் என்ற

உத்தமன் நெஞ்சில் சுட்டான்!


உள்ளத்தில் நெடுநாளாய்  

உறுத்திக் கொண்டிருந்த

கொடும்பாரத்தை 

இங்கிலாந்து மண்ணில்

இறக்கி வைத்தான்!


இந்த இளந் தீ 

இங்கிலாந்து நீதிமன்றத்தில்

இயம்பியது இப்படி...!


"இவனை

இங்கிலாந்து மண்ணில்

இறக்கி வையுங்கள்!

அந்த

ஆறடியையாவது நான் 

ஆக்கிரமித்துக் கொள்கிறேன்!"


சுந்தரா!

சும்மா வரவில்லை

சுதந்திரம்!

சுப்பையா!

சுகமாய் வரவில்லை

சுதந்திரம்!


பொன்னம்மா!  நீ

பூவை இழந்ததால்

வந்தது சுதந்திரம்!

கண்ணம்மா!  நீ 

கன்றை இழந்ததால்

வந்தது சுதந்திரம்!


விடுதலை வேள்விக்கு

உயிரை நெய்யாக்கி 

வெள்ளைச் சேலைகள் 

விலைக்கு வாங்கப்பட்டன!


வனிதைகள்

வாழ்விழந்து

வைதவியதுக்கு

வாழ்க்கைப் பட்டன!


பத்தினிப் பெண்டிர் 

தீ நாக்குகளில் 

தீய்ந்து போயினர்!

தீய்ந்து தீய்ந்து  

தீயாய் ஆகினர்!


நாட்டுத் தலைகள் சில 

வீட்டுச் சிறைகளில் 

விலங்கிடப்பட்டனர்!


தேச மக்கள் சிலர் 

மோச மக்களை எதிர்த்து 

பாச மக்களை பிரிந்து 

பலியிடப்பட்டனர்! 


சகோதரா!

சுளுவில் வரவில்லை

சுதந்திரம்...!  நாட்டார்

வழுவில் 

வந்தது சுதந்திரம்!


பூச்செண்டு கொடுத்து

பெறவில்லை சுதந்திரம் 

பேச்சற்று வீச்சற்று 

வரவில்லை சுதந்திரம்!


தேசியக்கொடியின்

மூன்று வண்ணமும்

மூன்று எண்ணம்!


காவி 

சிந்திய ரத்தம்!

வெள்ளை 

விதவையின் ஆடை! 


பச்சை

வாரிக் கொண்டுபோன

நம் வளம்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)