இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!
அ. சீ. லாவண்யா
புதுடெல்லி: உலக பொருளாதார அரங்கில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக பொருளாதார அரங்கில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வேகமான பொருளாதார வளர்ச்சி, உற்பத்தித் துறை வளர்ச்சி, சேவைத் துறையின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டு நுகர்வு, அதிகரிப்பு ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள், கட்டுமானம், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் 'மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வேகத்தை வழங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பின் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பானை முந்திய இந்த வளர்ச்சி, ஆசிய பொருளாதார சூழலில் இந்தியாவின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது. சர்வதேச சந்தைகளிலும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானை முந்தி 4-வது இடத்தைப் பிடித்த இந்தியா, இப்போது மேலும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்கத் தயாராகியுள்ளது. உலக பொருளாதார மேடையில் இந்தியாவின் இந்த முன்னேற்றம், "வளர்ந்து வரும் நாடு" என்ற அடையாளத்தைத் தாண்டி, "வழிநடத்தும் சக்தி" என்ற புதிய அடையாளத்தை உருவாக்கும் என பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
(அ. சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)