இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

Su.tha Arivalagan
Jul 28, 2026,11:06 AM IST

மும்பை : இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான 15 பேர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (ஜூலை 28, 2026) முறைப்படி அறிவித்துள்ளது.


சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி:

இலங்கைக்கு எதிரான இந்த முக்கிய டெஸ்ட் தொடருக்கு இளம் நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில் தலைவராக (கேப்டன்) நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் கே.எல். ராகுல் துணை தலைவராக (வைஸ் கேப்டன்) செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரெல் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


பும்ரா, சாய் சுதர்சன் உடற்தகுதிக்கு நிபந்தனை:

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பங்கேற்பு உடற்தகுதியை பொறுத்தே அமையும் என பிசிசிஐ தெரிவிவித்துள்ளது. பிசிசிஐ-யின் சிறப்பு மையத்திடமிருந்து (BCCI Centre of Excellence - COE) உடற்தகுதி சான்றிதழ் பெற்ற பிறகே இவர்கள் இருவரும் ஆடும் லெவனில் அல்லது தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.


அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:




1. சுப்மன் கில் (கேப்டன்)

2. கே.எல். ராகுல் (துணை கேப்டன்)

3. யஷஸ்வி ஜெய்ஸ்வால்

4. ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)

5. சாய் சுதர்சன் 

6. துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்)

7. ரவீந்திர ஜடேஜா

8. குல்தீப் யாதவ்

9. மானவ் சுதர்

10. ஜஸ்பிரித் பும்ரா 

11. முகமது சிராஜ்

12. பிரசித் கிருஷ்ணா

13. குர்னூர் பிரார்

14. தேவ்தத் படிக்கல்

15. சரண்ஷ் ஜெயின்


சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சு கலவை:

இலங்கை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களை கொண்டது என்பதால், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர் மற்றும் சரண்ஷ் ஜெயின் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் இளம் வீரர் குர்னூர் பிரார் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.