இந்திய வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அனுமதி மறுப்பா?.. பொய் பரப்பிய பாக். மீடியாக்கள்

Su.tha Arivalagan
Dec 02, 2025,11:49 AM IST

- க.சுமதி


டெல்லி: இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு அனுமதி தர இந்தியா மறுத்து விட்டதாக பொய்யான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.


டிட்வா புயலினால் கடந்த இரு தினங்களாக இலங்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. கடும் நிலச்சரிவு ,மரங்கள் வேருடன் சரிந்து பாதையை மறைத்தது, வெள்ளப் பெருக்கு போன்ற பல இயற்கை பேரழிவுகளால் இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரழிவிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க பல்வேறு நாடுகளில் இருந்து மீட்பு குழுக்களும் உதவிப் பொருட்களும் சென்று கொண்டிருக்கின்றன.


இந்தியா பெருமளவில் இலங்கைக்கு உதவிகளைச் செய்து வருகிறது. நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தனி விமானம் மூலம் அங்கு சென்றுள்ளனர். உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.




இதேபோல பாகிஸ்தானும் தன் பங்கிற்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் இதிலும் இந்தியாவை வம்பிழுத்துள்ளது அந்த நாட்டு ஊடகங்கள். அதாவது பாகிஸ்தான் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு இந்தியா தனது வான்பரப்பை அனுமதிக்க மறுத்து விட்டதாக பொய்ச் செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பிக் கொண்டுள்ளன. 


ஆனால் இதை இந்தியா முற்றிலும் மறுத்து நிராகரித்துள்ளது. இந்தியாவைப் பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் அவதூறான, பொய்யான செய்தியைப் பரப்புவதாக இந்தியா விளக்கியுள்ளது. பாகிஸ்தானிடமிருந்து அனுமதி கோரி கோரிக்கை வந்த சில மணி நேரங்களிலேயே அந்த நாட்டு விமானங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தரப்பட்டதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)