தன்தேராஸ் 2025.. வட மாநிலங்களில் நாளை விமரிசையான கொண்டாட்டம்!
- ஸ்வர்ணலட்சுமி
தன்தேராஸ் .. அதாவது செல்வச் செழிப்பை பெருக்கும் தன் தேராஸ் நிகழ்வானது, விசுவாசு வருடம் 20 25 அக்டோபர் மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை வடமாநிலங்களில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பண்டிகைகள் மேலும் முக்கியமான விசேஷமான நாட்களில் தங்கம் வாங்குவது செல்வத்தை பெருக்கும் என்பது ஐதீகம். என்னங்க தங்கம் விக்கிற விலைக்கு வாங்க இயலுமா?... என்று எல்லோரும் மனதிலும் கேள்வி எழும்பும்... அதற்கு மாற்றாக வேறு எந்த பொருட்களை வாங்கலாம் என்பதை பற்றி சிறு தகவல்...
அக்ஷய திருதியையில் தங்கம் வெள்ளி வாங்கும் வழக்கம் பலரிடையே உள்ளது.அதேபோல் தன் தேராஸ் நாளிலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது வட இந்தியர்கள் வழக்கமாக உள்ளது. முக்கியமாக அவர்கள் வெள்ளி நாணயங்கள் வாங்குவது செல்வச் செழிப்பை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தீபாவளி மறுநாள் நோன்பு எடுக்கும் வழக்கம் நிறைய வீடுகளில் என்றும் பின்பற்றுகின்றனர். தன்தேராஸ் என்பது தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு வரும் தேய்பிறை திரியோதசி அன்று தன தி ரியோதசியாக கொண்டாடப்படுகிறது. "தனம் 'என்பது செல்வத்தை குறிக்கும். இந்த தன திரியோதசி நாளே 'தன் தே ராஸ் 'என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் தான் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரி பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராக அவதரித்தார். இந்த நாளை 'தன்வந்திரி ஜெயந்தி'யாகவும் கொண்டாடுகின்றனர். இந்த நாள் தீபாவளி கொண்டாட்டத்தை துவக்கும் முதல் நாளாகவும் மற்றும் ஐந்து நாட்கள் தீபாவளி பண்டிகை வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.
புதிய தொழில்கள் துவங்குவதற்கும் மற்றும் மங்களப் பொருட்கள் வாங்குவதற்கும் இந்த நாள் சுபிக்ஷமான நாளாக கருதப்படுகிறது. மகாலட்சுமி, குபேரர் மற்றும் ஆயுர்வேதத்தின் கடவுளாக தன்வந்திரி பகவானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.
நேரம்: லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 6:44 மணி முதல் 7:42 மணி வரை. மாலை 5:30 மணி முதல் பூஜைக்கு தேவையான அலங்காரங்கள் செய்யத் துவங்கி ஆறு மணி முதல் பூஜை செய்வது சிறப்பு.
பூஜை செய்யும் முறை: லட்சுமி குபேரருடைய படம் அல்லது மகாலட்சுமி படம், லக்ஷ்மி கலசம் வைத்திருப்பவர்கள் ஒரு மனைபலகை மீது வடக்கு பார்த்த வண்ணம் வைத்து,கோலமிட்டு, குபேர எந்திரம் வரைந்து, தாமரை, துளசி, மல்லி, முல்லை போன்ற மலர்களால் அலங்கரித்து 108 நாணயங்கள்,மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம் போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து நைவேத்தியமாக அவல் பாயாசம் அல்லது தாளிப்பு செய்து வழிபடுவது விசேஷம்.
மேலும் 108 ஒரு ரூபாய் நாணயம் அல்லது ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் நாணயங்கள் வைத்து 108 மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிப்பது, அர்ச்சனை செய்வது சிறப்பு. அல்லது ஒன்பது நாணயங்கள், தாமரை இதழ்,குங்குமம் வைத்து அர்ச்சனை செய்யலாம். எளிமையாக "ஓம் குபேராய நமஹ" எனும் மந்திரத்தை உச்சரித்தும் அர்ச்சனை செய்யலாம். இந்த நாள் மகாலட்சுமி பாடல்கள், லக்ஷ்மி குபேரர் பாடல்கள், கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பது சிறப்பு. முதலில் விநாயகரை வணங்கி,குலதெய்வம், இஷ்ட தெய்வம் வணங்கி பூஜை செய்வது சிறப்பு.
என்ன பொருட்கள் வாங்கலாம்?...
விலை உயர்வின் காரணமாக தங்கம் வாங்க இயலாதவர்கள் வெள்ளி நாணயங்கள்,வெள்ளி விளக்கு, பித்தளை, செம்பு பாத்திரங்கள் வாங்குவது சிறப்பு. மேலும் குளிர்சாதன பெட்டி, மின்னணு பொருட்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், வாஷிங் மெஷின் என அவரவர் தேவைக்கு ஏற்ப வாங்கலாம். இந்த நாள் துடைப்பம் வாங்குவது சிறப்பு. கல் உப்பு ( மகாலட்சுமியின் அம்சம்), விரலி மஞ்சள்,அரிசி, பருப்பு, பச்சைக் கற்பூரம் ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்களை வாங்குவது அத்தியாவசிய பொருட்கள் வீட்டில் என்றும் நிறைந்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப வாங்குவது நன்மை பயக்கும்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் பூஜை மேற்கொள்வது சிறப்பு. குடும்பத்தில் செல்வ செழிப்பு,அமைதி, கல்வி, தொழில் முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை மேலோங்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜை மேற்கொள்வது சிறப்பு. எளிமையாக பூஜை செய்பவர்கள் பூஜையறையில் விளக்கேற்றி,9 நாணயங்கள் வைத்து மனதார செல்வம் வீட்டில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணி பூஜை செய்வது அதீத சிறப்பு.
அக்டோபர் 18ஆம் தேதி பூஜை செய்ய இயலாதவர்கள் இருபதாம் தேதி தீபாவளி அன்று மாலை பூஜையை மேற்கொள்ளலாம். மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் அட்வான்ஸ் "தீபாவளி நல்வாழ்த்துக்கள்". வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.