விலங்கொடித்த விடிவெள்ளி!

Su.tha Arivalagan
Oct 06, 2026,12:37 PM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


பழமைவாதக் குடும்பத்தில் பிறந்த மல்லிகாவுக்கு,  சட்டம் படிக்க வேண்டும் என்பதுதான் அடங்காத ஆசை. ஆனால், "பெண்களுக்கு எதுக்குடி சட்டப் படிப்பு? படித்தது போதும்" என்ற பெற்றோரின் சொற்களால் அவள் சிறகுகள் தினமும் வெட்டப்பட்டன. 


ஒரு மாலை வேளையில், வீட்டின் திண்ணையில் அமர்ந்து, யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த சட்டப் புத்தகத்தை ஆசையோடு வருடிக்கொண்டிருந்தாள்.


அப்போது, அவளுக்கு நேரே ஒரு செவ்வண்ணப் பறவை வந்து அமர்ந்தது. அது கூண்டுகளற்ற வானில் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறப்பதை மல்லிகா ஏக்கமாகப் பார்த்தாள்.


 "உனக்கிருக்கும் சுதந்திரம் கூட எனக்கு இல்லையே..." என்று மனதுக்குள் ஆதங்கப்பட்டாள்.


அந்தப் பறவையின் கூர்மையான பார்வையும், அதன் சுதந்திரமான நிமிர்வும் அவளுக்குள் ஒரு புது  நம்பிக்கை நெருப்பைப் பற்றவைத்தது. 




"சிறகுகள் பறவைக்கு மட்டுமல்ல, அறிவென்னும் சிறகு பெண்ணுக்கும் உண்டு" என்பதை உணர்ந்தாள்.

அடுத்த கணமே தன் ஏக்கத்தை, பயத்தை உதறி எழுந்தாள்.


பெற்றோர்களிடம் தனக்கான நியாயத்தை வாதிட்டு, தனது விலங்கை ஒடித்து, தன்னம்பிக்கையுடன் தடைகளை மீறிப் படித்து, அதே ஊரில் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞராக உருவெடுத்தாள். 


தனது நியாயமான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள கூண்டுகளை உடைத்து  பறந்து எழுவதே உண்மையான சமூக நீதி என உணர்ந்து கொண்டாள் மல்லிகா.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)