Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
(முன் கதை சுருக்கம்- எப்போதும் காலை ஐந்து மணிக்கு எழுந்து சமையலறையில் பம்பரமாய் சுழலும் சங்கரியை அன்று சமையலறையில் காணோம். அன்று ஆறு மணி ஆகியும் அவள் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. அவள் அறைக்கு சென்று பார்த்த பாஸ்கரன் திகைத்து நிற்கிறான்.)
பாஸ்கர் பக்கத்தில் இருந்த ஒரு டாக்டருக்கு போன் செய்தான். விஷயத்தை சொன்னதால் டாக்டர் வந்தார். பரிசோதித்து விட்டு “எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர். நள்ளிரவே அவர் உயிர் போய் இருக்க வேண்டும். ஹார்ட் அட்டாக்கா இருக்கலாம்.. மனதை தேற்றிக் கொள்ளுங்கள் பாஸ்கர்..” எனக் கூறிவிட்டு சென்றார்.
குழந்தைகள் எழுந்து விட்டனர். கிச்சனுக்கு சென்ற கடைக்குட்டி பையன், அம்மாவை காணவில்லை என்றதும், அவள் அறைக்கு வந்தான். அப்பா பக்கத்தில் நின்று கண்ணீர் சிந்து கொண்டிருந்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை
“ஏப்பா அழறீங்க..? அம்மா என்ன… இன்னும் தூங்கிட்டு இருக்காங்க.?”
ஐயோ மகனே செந்தில், அம்மா நம்மளை விட்டுப் போய்விட்டாளடா.! கதறினான்.
விஷயம் அறிந்து பக்கத்து வீட்டிலிருந்து பெண்மணிகள் வந்து துக்கத்துடன் விசாரித்தனர். “என்ன ஆச்சு எப்படி …? நேற்று கோயில் வந்த போது கூட , நல்லா தான் பேசிகிட்டு இருந்தாங்க .எப்படி ஆச்சு இப்படி ..?” என புலம்பி தீர்த்தார்கள்.
தோழிகள் அனைவரும், மூக்கின் மேல் விரலை வைத்து ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். “எப்ப பாத்தாலும் குடும்பம் குடும்பம்னு சொல்லி அதுக்காகவே உழைச்சுகிட்டு இருந்தா ..இப்ப இப்படி .. எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போயிட்டாளே.”
அவள் தோழி மங்கைக்கு மட்டுமே அவளின் சோகம் புரியும். சங்கரி தன் மன வருத்தங்களை மங்கையிடம் மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.
சங்கரி இப்படி போய் விட்டாயே..,!! குடும்பத்துக்காகவே வாழ்ந்து எந்த சந்தோஷமும் இல்லாமல் இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டாயே…! எனக் குமுறிய மங்கை வெளியே ஏதும் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல், தனக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
அன்று மாலை எல்லாம் முடிந்து விட்டது. சங்கரி போய்விட்டாள். குடும்ப கௌரவம் என பார்த்து பார்த்து, மனதுக்குள்ளையே ,வெந்து வெந்து, அவள் இதயம் நின்று விட்டது.. உயிருள்ள சடலமாய் வாழ்ந்து கொண்டிருந்த சங்கரி, இப்போது உயிரற்ற சடலமாய் போய்விட்டாள்.
சங்கரியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல. அவளது மன உளைச்சலின் உச்சம். வடிகால் இல்லாத மன வேதனை . விடுதலைக்கு ஏங்கிய மனசு. அந்த துக்கம் அவளது இதயத்தை பிளந்தது. ஆகவே இது பாஸ்கர் செய்த கொலை என்று நினைத்தபடி, மங்கை தன் வீட்டிற்குச் சென்றாள்.
இருபது நாட்கள் கழித்து , ஒருநாள் மங்கை சங்கரியின் குழந்தைகளை பார்த்து வரலாம் என வந்திருந்தாள். “என்ன சார் எப்படி இருக்கீங்க.. ? சங்கரி இல்லாம எப்படி வீட்டை மேனேஜ் பண்றீங்க.? அவளே எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு இருந்தா. அவளோட உழைப்பை யாராலும் ஈடுகட்டமுடியாது .இப்போ எப்படி சமாளிக்கிறீங்க சார்.”
“ஒரு சமையக்கார அம்மா வந்து சமைச்சிறாங்க. மற்ற வேலைக்கு ஒரு வேலைக்கார பொண்ணு வரும்.. வீடு எல்லாம் கிளீன் பண்ணி, வேலைய முடிச்சுட்டு போறாங்க . பிள்ளைங்க அவங்க வேலையை அவங்களே பார்த்துக்கிறாங்க. நானும் கொஞ்சம் கவனிச்சிக்கிறேன் ஓடுது.” சாதாரணமாச் சொன்னார் சங்கரியின் கணவர்..
மங்கை தன் மனதிற்குள் சமையல்காரம்மா சமைப்பதற்கும், மனைவி சமைப்பதற்கும், உள்ள வித்தியாசம் இவருக்கு தெரியுமா..? திரும்பி… பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கரியின் 16 வயது மகள் ரம்யாவை கவனித்தாள். அவள் கண்கள் கலங்கி, கடலாகி எப்போது பொங்கும் என்ற நிலையில் இருந்தது. மங்கை ரம்யாவை அணைத்துக் கொண்டாள். கண்ணீர் மலமலவெனக் கொட்டியது… அந்தக் கண்ணீரின் உள் அர்த்தம் மங்கையால் முழுவதும் உணர முடிந்தது.
“அடிக்கடி வாங்க ஆன்ட்டி” என ரம்யா கேட்டுக்கொண்டாள்.
மங்கையை வழி அனுப்ப வாசலுக்கு வந்த ரம்யா, மங்கையை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது ஆன்ட்டி. அம்மா இறந்ததிலிருந்து நான் ஒரு நாள் கூட நல்லா தூங்கல. ஏதோ திடீர்னு அனாதையாகி விட்டது போல ஒரு உணர்வு. எனக்கு யாருமே இல்ல அப்படிங்கிற ஒரு உணர்வு தான் நாள் முழுவதும் என் மனசுக்குள்ள இருக்கு.
ரம்யாவை எப்படி ஆறுதல் படுத்துவது என தெரியாமல் விக்கித்து நின்றாள் மங்கை.
இந்த பெண்ணின் மனநிலை அவள் அப்பாவுக்கு புரியுமா..? அம்மாவை இழந்த பதினாறு வயது பெண் குழந்தையின் மனநிலையை மங்கையால் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மா இத்தனை வருஷத்துல எங்களை விட்டுட்டு ஒரு நாள் கூட எங்கேயும் போனதில்ல ஆன்ட்டி .அப்பா விடவும் மாட்டாங்க . எங்க அம்மா கடைசியா.. ஆசையா ஒரு நாள் உங்களோட, எல்லாரும் சேர்ந்து பிக்னிக் போறேன்னு கேட்டாங்க .அதுக்கு கூட அப்பா விடல. இப்போ ஒரேயடியா எங்களை விட்டு போயிட்டாங்களே ஆன்ட்டி.
இந்த வேலைக்காரம்மா மொத்த மொத்தையா தோசை ஊத்துறாங்க ஆன்ட்டி .தோசையை ஊத்தி அடுக்கி வைத்து விடுகிறார்கள். ஆறிப்போய்விடுகிறது . எங்க அம்மா கையால , சுட சுட மெல்லிசா தோசை சுட்டு சாப்பிடணும்னு ஆசையா இருக்கு ஆன்ட்டி. எங்க அம்மா மடியில தலை வச்சு படுக்கணும் என தோணுது. ரம்யா கேவி கேவி அழுவதை பார்க்க முடியவில்லை மங்கையால். எப்படி இந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்வது .? யாரால் ஆறுதல் சொல்ல முடியும்..?
தினம் தினம் இப்படி செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல சங்கரிகளின் இதயம், இப்படி ஒருநாள் , பாரம் தாங்காமல் நின்று விடுகிறது. பாஸ்கரன்கள் தாங்கள் கொலைகாரர்கள் என்பது கூட தெரியாமல், உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவோடு வீடு வந்து சேர்ந்தாள் மங்கை.
மறுநாள் “அப்பா… அப்பா.. ரம்யா சாப்பிடவே இல்லப்பா .சாப்பிடாம ஸ்கூலுக்கு கிளம்புற…” என்றான் ரம்யாவின் தம்பி.
“ஏய் என்ன ரம்யா.. ஏன் சாப்பிடல.? போய் உட்கார்ந்து சாப்பிடு.”
“எனக்கு சாப்பிட பிடிக்கலப்பா. அந்த தோசையை யாரு சாப்பிடுவா? வறட்டி மாதிரி இருக்கு.”
“இருக்கிறதை சாப்பிட்டு தான் ஆகணும். வேற வழி இல்ல. பொம்பள புள்ள இப்படி வாய்ருசி எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க கூடாது. உங்க அம்மா எப்படி இருந்தா தெரியும்ல.”
அதைக் கேட்டவுடன் ரம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது.
“எங்க அம்மாவ பத்தி ஏதாவது பேசினீங்க எனக்கு கெட்ட கோபம் வரும் . அம்மாவை மாதிரி என்னையும் இருக்க சொல்றீங்களா..? அம்மா இறந்ததே உங்களால்தான். எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல. ஏன் அம்மா மாதிரி நீங்க எங்களுக்கு… தோசை சுட்டு கொடுங்களேன் .நான் சாப்பிட்டு போறேன்.”
முறைத்தான் பாஸ்கர்.
“என்னப்பா முறைக்கிறீங்க. என் ஃப்ரெண்டோட அம்மாவும் வேலைக்கு தான் போறாங்க . அவங்க தான் வீட்ல சமைச்சுட்டு எல்லாருக்கும் எல்லாம் பண்ணிட்டு ஆபீசுக்கு போறாங்க. இப்பதான் அம்மா போய் சேர்ந்துட்டாங்களே. நீங்க தானே இருக்கீங்க. அப்ப அம்மாவுக்கு பதில் நீங்க எங்களுக்கு சமைச்சு கொடுக்க கூடாதா? மெல்லிசா தோசை சுட்டு கொடுக்க கூடாதா..? ஏன் உங்களுக்கு தோசை சுட தெரியாதா ..?”
மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாஸ்கரன் மௌனமாய் இருந்தான்.
“அம்மா ஒருநாள் மொத்தையா தோசை சுட்டதற்கு அந்த கத்து கத்துனீங்க. சமையக்காரம்மா செய்த வரட்டு தோசையை இப்போ சாப்பிட்டு போறீங்க. ஒரு நாளாவது அம்மா சமையலை நல்லா இருக்குன்னு பாராட்டி இருப்பீங்களா.? குறை மட்டும் நல்லா சொல்வீங்க. ஒரு நாளும் அம்மா ஓய்வா உட்கார்ந்து பார்த்ததில்லை. ஆனா எப்ப பாத்தாலும் சும்மா தானே இருக்க.. சும்மா தானே இருக்க … வேலைய பாரு. இதே பேச்சு. எத்தனை தடவை அவர்கள் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?”
“அம்மா இருக்கும்வரை ஒரு நாள் கூட ,அவர்களை அவங்க விருப்பப்படி வெளியே எங்கேயும் போக விடல . ஏதாவது கேட்டா வேலைய பாரு.. வேலைய பாரு.. அப்படின்னு ஒரு டயலாக். இப்போ ஒரேயடியா வேலைய பாக்க போய் சேர்ந்துட்டாங்க. அம்மா இல்லாம நாங்க தான் இப்ப கஷ்டப்படுறோம். அம்மா இல்லாத வீடு வீடாவே இல்லை. ஒரே வெறுப்பா இருக்கு.”
இப்ப சமையக்காரம்மாவுக்கு ஒரு சம்பளம். மேல் வேலை பார்க்கும் வேலைக்காரம்மாவுக்கு ஒரு சம்பளம் . டிரஸ் அயர்ன் பண்ண தனியா கொடுக்குறீங்க. எவ்வளவு காசு செலவு செய்கிறீர்கள். இவ்வளவு செலவு செய்தும் வீடு வீடா இல்ல. அம்மா இருக்கும் போது வீட்டுக்குள்ள நுழையும் போதே அப்படி ஒரு சந்தோஷமா இருக்கும் . அவ்வளவு நீட்டா வீட்டை வச்சிருப்பாங்க . எல்லாமே இருக்க வேண்டிய இடத்துல கரெக்ட்டா இருக்கும். இப்ப வீடே அலங்கோலமாக கிடக்கு. துவைத்த துணிய மடிக்க கூட ஆள் இல்லை. இப்ப அந்த வேலை எல்லாம் நான் பார்த்து கிட்டு இருக்கேன். இனிமே உங்க துணியை நீங்க தான் மடிச்சு வச்சுக்கணும். தம்பி டிரஸ்ஸை அவனே மடித்துக் கொள்ளட்டும். வீட்டுக்கு வரும்போது என் ஸ்கூல் விஷயங்கள சொல்றதுக்கு கூட ஒரு ஆள் இல்ல. என்னை ஹாஸ்டல்ல போய் சேர்த்துருங்கப்பா.”
“என்ன ரம்யா ரொம்ப ஓவரா பேசுற .எங்கே இருந்து வந்தது இந்த வாய்”
“அப்படி தாம்ப்பா பேசுவேன். அப்படிதான் பேசுவேன். அம்மா மாதிரி இருக்க மாட்டேன்”
“அன்றைக்கு என்னவோ பாட்டி கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. ரம்யாவுக்கு கல்யாணம் செய்து கொடுத்த பிறகு இவ போயிருந்தா கூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்னு .எனக்கு கல்யாணம் அப்படிங்கற விஷயத்தை ….சுத்தமா மறந்துடுங்க. நான் எவனையுமே கல்யாணமே பண்ணிக்க போறதில்லை. உங்களை மாதிரி ஆம்பிளைகிட்ட, அம்மா மாட்டிகிட்டு முழிச்ச மாதிரி, நான் யார்கிட்டயும் மாட்டிகிட்டு வாழ தயாரா இல்லை. இங்க அம்மாவை மாதிரி, என்னைய எதற்கும் அடிபணிய வைக்கலாம்ன்னு நினைக்காதீங்க. அப்படி நீங்க ஏதாவது செஞ்சீங்க. நானும் அம்மா கூட போயிருவேன். அம்மா ஹார்ட் அட்டாக் - ல இறந்திருந்தாங்கன்னா அதுக்கு நீங்க தான் காரணம். அம்மா மாதிரி குடும்ப கௌரவம் அது இது என பார்த்துக்கொண்டு ,அமைதியாக இருக்க மாட்டேன். நினைவு இருக்கட்டும்” என்று கூறிவிட்டு, பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள் ரம்யா.
மகள் பேசியதை கேட்டு அதிர்ந்து போனான் பாஸ்கரன். மகள் ரம்யா பேசிய பேச்சு அவர் காதுகளில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது . என்னால் தான் சங்கரி இறந்தாளா.! அவள் இறப்புக்கு நான் தான் காரணமா.? நான் இவ்வளவு தவறுகளா செய்து இருக்கிறேன்.? இதுவரை புரியாதது மகள் சொல்லி புரிகிறது. ஆம் அவளை நான் மனுஷியாய் நடத்தியதில்லை . ஏன் எனக்கு இதுவரை புரியவில்லை. ஆண் என்ற ஆணவம் அதை மறைத்து விட்டது. பாவம் சங்கரி. எனது கத்தலுக்கு பயந்து, குடும்ப கௌரவம் கருதி, குழந்தைகளின் நலன் கருதி தனக்குள்ளேயே செத்துக் கொண்டிருந்தவள், இப்போது ஒரேடியாய் போய் விட்டிருக்கிறாள். இறைவா என்னை மன்னித்துவிடு. சங்கரி என்னை மன்னித்துவிடு என மானசீகமாய் மன்னிப்பு கேட்டான்.
அடுத்த நாள் ரம்யா பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். கிச்சனில் சமையல்கார அம்மா இல்லை. அப்பா கரண்டியோடு நின்று கொண்டிருந்தார். ரம்யா சாப்பிட வா என அழைத்தார். டைனிங் டேபிளில் சூடாய் மெல்லிதாய் ,தோசை நெய் விட்டு, மொருமொருவென இருந்தது.
“என்னப்பா சமையல்கார அம்மா வரலையா.?”
“ இனி வர மாட்டாங்க.”
ரம்யா ஆச்சரியத்தோடு அப்பாவை நோக்கினாள். அப்பா புன்முறுவலோடு ரம்யாவின் தலையினை கோதி , அப்பா சுட்ட தோசை எப்படிம்மா இருக்கு.?
நல்லா இருக்குப்பா.! இன்னொரு தோசை வேணும்ப்பா. ஆனா அம்மா சுட்ட தோசைக்கு ஈடாகாதுப்பா. ரம்யா அப்பாவின் தோள்களின் சாய்ந்து கொண்டாள்.
“சாரிம்மா ரம்யா.”
“என்னப்பா… நீங்க போயி…!” ரம்யாவின் கண்கள் கலங்கின.
முற்றும்.
(இலக்கியபீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 2வது இடம் பெற்ற கதை)
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)