Tamil Short Story: கௌரவம்

May 23, 2026,12:20 PM IST
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
                       *
சங்கரிக்கு கோவம் கோவமாய் வந்தது. அந்த மாலை பொழுதிலும் , கோடைகால உச்சி வெயிலின்  சூரியக் கதிர்களால், பூமி தாய் கொதிப்பது போல சங்கரியின்   உள்ளம் கொதித்தது. மறுபடியும் கேட்டால் தாம் தூம்..ன்னு  கத்துவார். பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேட்கும். குடும்ப கௌரவம் போயே  போச்சு. அவர் கத்த ஆரம்பிச்சா பத்து வீட்டுக்கு கேட்கும். என்ன செய்றது  மேலும் பேசாமல் மௌனமானாள் சங்கரி.  அவள் தன் கணவரிடம் கேட்டது இதுதான்.!

“ ஏங்க …ஒரு விசயம்.”

“என்ன..? “

“எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து,   மகளிர் தினம் அன்று,  ஒரு பிக்னிக் மாதிரி, வேன் ஏற்பாடு பண்ணிட்டு, குற்றாலத்திற்கு , போயிட்டு வரலாம்ன்னு   இருக்கோம். இங்கே இருந்து பக்கம் தானே.  அதான் உங்ககிட்ட , ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்னு சொன்னேன்.  நானும் போயிட்டு வரவா” என்றாள் சங்கரி.

“என்ன… மகளிர் தினத்துக்கு பிக்னிக் போறீங்களா? என்ன காலேஜ் ஞாபகமா.? சின்ன பொண்ணுன்னு நினைப்பா உனக்கு.? நாற்பது வயசாகுது. உனக்கு பிக்னிக் கேக்குதா..? புள்ளைங்களை எல்லாம் விட்டுட்டு  நீ பிக்னிக்  போறியா..? ஊர் சுத்துற வேலையை விட்டுட்டு புள்ளைங்கள பாக்குற வேலைய பாரு.”

“ஒரு நாள் தானே. காலை பத்து மணிக்கு போயிட்டு மாலை ஆறு  மணிக்குள்ள  வீடு திரும்பிருவோம். என்ன  ரொம்ப சின்ன பிள்ளைங்களா.? பத்து ,பதினைந்து  வயசு பிள்ளைங்க.  பிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க..ஒரு நாள் பிரண்ட்ஸ் கூட போயிட்டு வரேன். காலையில  சமையல் எல்லாம் செய்து முடிச்சுட்டு, எல்லாம் டேபிள்ல எடுத்து வச்சுட்டு போறேன். மத்தியானம்  ஒருவேளை மட்டும் தானே. குழந்தைங்க  சாப்பிட்டுப்பாங்க. நான் சொல்லிட்டு போறேன்.”

“இந்தாடி… ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு…?”



ருக்மணி போன் செய்தாள். “என்ன சங்கரி பிக்னிக் வர்ற தானே.உன்  வீட்டுக்காரர் ஓகே சொல்லிட்டாரா?  ரூபாய் 300 வந்து குடுத்துட்டு போ. நல்ல ஏசி வேன்  முன்னாடியே புக் பண்ணனும்.”

“இல்ல ருக்மணி நான் வரல. எனக்கு வேற வேலை இருக்கு. அவரோட தங்கச்சி ஊர்ல இருந்து வராங்க. அதனால வீட்டில நிறைய வேலை இருக்கு.  வீடு எல்லாம் கிளீன் பண்ணனும் .அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.”

“இத பாரு சங்கரி ..அடுத்த வருஷம் போறோமோ என்னமோ. இப்ப ஏதோ பிளான் பண்றோம். போயிட்டு வருவோம் .ஒரு நாள் ஜாலியா. இந்த சந்தோஷம் அப்புறம் உனக்கு திரும்ப கிடைக்காது.”

இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீட்டுக்காரர் அனுமதி தரவில்லை என எப்படி  கூறுவது. என்ன நினைத்துக் கொள்வார்கள் அவரைப்பற்றி. “இல்ல ருக்மணி வரல. அடுத்த வருஷம் பாத்துக்கலாம்.” 

“வீட்டுக்குள்ளேயே இப்படி நாள் முழுதும் சமையல்  கட்டே  கதின்னு கிடக்குற நீ. பாத்திரம் கழுவுறதும், வீடு கிளீன் பண்றதும்,  இது தான் உனக்கு தினம் வேலை. மகளிர் தினம் அன்றைக்கையாவது  ஒரு நாள் சந்தோஷமா வரக்கூடாதா..? சரி உன் இஷ்டம்.”போனை வைத்தாள் ருக்மணி. 

சங்கரிக்கு மனசுக்குள் மறுபடியும் ஒரு நெருடல். திரும்பவும் கேட்டு பார்க்கலாமா..?  இந்த சாதாரண விஷயத்திற்காக இந்த மனுஷனுடன் சண்டை போடுவதா? என்ன வாழ்க்கை இது? வருஷம் முழுவதும் காபி போடுவதும் ,சமையல் பண்ணுவதும், பாத்திரம் கழுவுவதும், வீடு துடைப்பதும்  இதே வேலை. ஒரு நாள் தோழிகளுடன் வெளியே போய் வருவதற்கு ஆசையாய் கேட்டா இப்படி கத்துகிறாரே. பொண்டாட்டி  என்றால் கிள்ளுக்கீரை  என்ற நினைப்பு அவருக்கு.  அவர் கிழித்த கோட்டை  மனைவி தாண்டக்கூடாது என்ற  ஈகோ. சில  விஷயத்திற்கு சொன்னால் சரி என  ஏற்றுக் கொள்ளலாம். இதுக்கு கூடவா..? மனதிற்குள் வெதும்பி போனாள் சங்கரி.

வேறு வழி இல்லாத நிலையில், மறுபடியும் கேட்டாள். மறுபடியும் கத்தினார். முறைத்தார்.  விட்டால்  வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும் என்பதால்,  அமைதியானாள்.. இது முதல் தடவை அல்ல. எத்தனையோ தடவை எதற்கு அனுமதி கேட்டாலும், எதையாவது சொல்லி தட்டிக் கழிப்பார். ஒண்ணுமே சொல்லாமல் வேலையை பாரு என்பார் .திருப்பி கேட்டால் கத்துவார். பக்கத்து வீட்டுக்கு கேட்கும் என்பதால், குடும்ப கௌரவம்  பார்த்து அமைதியாவாள். இப்படியே பதினெட்டு  வருட தாம்பத்திய வாழ்க்கை முடிந்து விட்டது. 

எதற்காக  திருமணம் செய்தோம் ..? குழந்தையை கவனித்துக் கொள்வது நம் கடமை தான் .வருடம் பூராம் தானே கவனித்துக் கொள்கிறோம். ஒரு நாள் என் மனசுக்கு சந்தோஷமாக, என் கோவில்  தோழிகளுடன் ,போய் வரக்கூடாதா ..?  சாகும்வரை நமக்கு இது போன்ற வாழ்க்கை தானா..? . எப்போது இவர் மனது மாறி என்னை சந்தோஷமாக போய் வா எனச் சொல்லப் போகிறார்.  கேட்டு கேட்டு வெறுத்து விட்டது.  எனக்கு எப்போது தான் சுதந்திரம் கிடைக்கும்..? அறுபது வயசுல.. இல்ல  எழுபது வயசுல..? சமீபகாலமாக வயசானவங்க தான் விவாகரத்து செய்றாங்களாம். நானும்  கூட விவாகரத்து செய்து விடலாமா..? அதுதான் தீர்வா…? மனதிற்குள்  இந்த எண்ணம் கூட வந்தது சங்கரிக்கு.

அம்மாடி …சொந்தக்காரர்கள் என்ன  சொல்வார்கள்.?. பக்கத்து வீட்டில் என்ன நினைப்பார்கள்.?. குழந்தைகளின் கதி என்ன..?  பெரிய பிரச்சனை வரும். குழந்தைகள் அம்மாவுடன் இருப்பதா..? அப்பாவுடன் இருப்பதா..? என பிரச்சனை வரும். அதையும் மீறி குழந்தைகளின் படிப்பு செலவிற்கு  பணம்..?? விவாகரத்து வாங்க கோர்ட் படியேற வேண்டும் .கோர்ட்டில் ஒரு பத்து வருடம் இழுத்தடிப்பார்கள். வக்கீலுக்கு  ஃபீஸ் கொடுத்து மாளாது.  என்ன செய்ய…? யாரிடம் சொல்லி அழுவது. நடுத்தர குடும்பத்துப் பெண்களின் நிலைமை  பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறதோ..!!  யோசித்து யோசித்து சங்கரிக்கு தலைவலி வந்தது மட்டும்தான் மிச்சம்.

இரண்டு மாதங்கள் கழித்து “ஏங்க இந்த வருஷம்  ஸ்கூல் லீவுக்கு குழந்தைகளை கூட்டிட்டு, எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்.”

“என்ன… உங்க அம்மா வீட்டுக்கா. அப்புறம் யார் எனக்கு சமைச்சு கொடுக்கிறது. நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன் என்பதை பத்தி உனக்கு கவலையே இல்லையா?. அந்த நினைப்பு உனக்கு எங்கே இருக்கும் ..? இருந்தா இப்படி கேப்பியா. .?”

அவள் தோழிகள் எல்லாம் விடுமுறைக்கு குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் நான் மட்டும்  இந்தப் பதினெட்டு வருடத்தில் ஒரு நாளும் சென்றதில்லை. குழந்தைகளுக்கும்  ஒரு மாற்றம் வேண்டாமா..? ‌ தாத்தா பாட்டியை பார்க்க வேண்டாமா..?  குழந்தைகளைப் பார்ப்பதில் அவர்களுக்கும் சந்தோஷம். குழந்தைகளுக்கும் சந்தோசம். ஏன் எனக்கும் தான். அவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எங்களின் சந்தோஷத்தை இழக்க வேண்டுமா..?

“ஏன் நீங்களும் வாங்களேன்.”

“அங்கே எல்லாம் என்னால வர முடியாது. உங்க அப்பா எனக்கு லீவு வாங்கி தருவானா..?” வீட்ல சும்மாவே இருக்க இல்ல .அதான் அங்க போகலாம் இங்கே போகலாம்ன்னு. என் டிரஸ் எல்லாத்தையும் எடுத்து அயன் பண்ணி வை.  அம்மா வீட்டுக்கு போறாளாம் . கால வெட்டிடுவேன்"

ஏன்  எனக்கு மட்டும் இப்படி..? என் தலை எழுத்து. இந்த சாதாரண விஷயத்திற்கு கூட இவரிடம் கெஞ்ச வேண்டுமா..?  எத்தனை தடவை சண்டை போடுவது..? பேசத் தெரியாது என்று இல்லை. அமைதியாக பேசினாலும் கேட்பதில்லை. அன்பாக பேசினாலும் கேட்பதில்லை.  அவள் பேசுவதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற நினைப்பு.  பொண்டாட்டினா அப்படித்தான் இருக்கணும் என்ற  நெனப்பு. இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க எப்படி இருக்காங்கன்னு அவருக்கு தெரியும். இருந்தாலும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை. என்ன செய்வது எனத்  தெரியாமல் குடும்பத்தின், பிள்ளைகளின் நலன் கருதி ,அவள் தன்னில் ஒடுங்கி ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருந்தாள்.

காலை ஐந்து மணிக்கு எழுந்தவளுக்கு இரவு பத்து மணி வரை வேலை ஓயாது. மதியம் ஒரு மணி நேரம் தான் அவளுக்கு ஓய்வு கிடைக்கும். அன்று அப்படித்தான் காலை 5 மணிக்கு எழுந்து கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் சங்கரி, அன்று கிச்சனில் இல்லை.. 

“ஏய் சங்கரி எங்கே இருக்க..? மணி  ஆறு ஆச்சு. கிச்சனில்  ஆளையே காணோம் .எங்கே போயிட்டா…?”

ஒரு பதிலும் இல்லை. “ஏய் சங்கரி.. சங்கரி..” என கூவிக்கொண்டே அவளின் அறைக்கு சென்றான். சென்றவன் அவள் அறையில் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து, “எருமை மாடு இன்னும் தூங்கிட்டு இருக்கியா, மணி  ஆறு ஆச்சு எழுந்திரு..”

ஒரு சத்தமும் இல்லை. அசைவும் இல்லை. பக்கத்தில் போய் பார்த்தால் , மூடிய கண் திறக்கவேயில்லை. அசைத்துப் பார்த்தான்.. அவள் படுத்திருந்த விதம் வித்தியாசமாய்ப்பட்டது .பிடித்து உலுக்கினான். கண் திறக்கவே இல்லை .அவனை  பயம் பற்றிக் கொண்டது. கண்களை திறந்து பார்த்தான். உடனே மூடிக்கொண்டது. மூக்கின் மேல் கை வைத்தான். ஒன்றுமே இல்லை. 

ஏதோ விபரீதம் நடந்து விட்டது என தனக்குள் உணர்ந்தவன், மறுபடியும் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தான். ஒரு அசைவும் இல்லை .ஆஹா போய்விட்டாளே. விக்கித்து நின்றான்.  கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர்.  பாஸ்கருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.!

அடுத்த வாரம் தொடரும்

(இலக்கியபீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 2வது இடம் பெற்ற கதை)

(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்