இரட்டைப் பின்னல் இந்திரா

Su.tha Arivalagan
Aug 05, 2026,02:56 PM IST

- தமிழ்மாமணி  எழுத்தாளர் இரா.‌ கலைச்செல்வி


செம்மண் பூமி சிவகங்கையில், அந்த பத்து வயதுச் சிறுமி இந்திரா இரட்டைப் பின்னலிட்டு நடந்து வருவதே ஒரு தனி அழகு. நடையில் அப்படி ஒரு தன்னம்பிக்கை. முகத்தில் அப்படி ஒரு கம்பீரம். கைகளில் எந்நேரமும் ஒரு நீண்ட மூங்கில் கோல் இருக்கும். ஊரிலிருக்கும் மற்ற சிறுமிகள் செம்மண் வீடுகட்டி விளையாடும்போது, இந்திரா மரத்தடிகளில் பஞ்சாயத்து கூட்டி விளையாடிக் கொண்டிருப்பாள்.


அவள் தந்தை காசிநாதன்,  அந்த ஊர் கவுன்சிலர்.  15 வருடங்களாக அந்த  பகுதியில் அவர்தான் கவுன்சிலர்.  அவர் மீது யாரும் எந்த குறையும் கூறிவிட முடியாது.  இந்திரா அவரின் கடைசி மகள். எந்நேரமும் நாட்டு நடப்புகளையும், விடுதலைப் போராட்டக் கதைகளையும் இந்திராவுக்கு சொல்லி வளர்த்தார்.


அதனாலோ என்னவோ, இந்திராவின் பார்வையில் ஒரு கூர்மையும், முடிவெடுப்பதில் மலை போன்ற உறுதியும் சிறுவயதிலேயே இருந்தது.


அன்று  அந்த ஊரில் ஒரு பிரச்சனை.   அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒரே ஒரு குளத்தில் போய்  குடிக்க நல்ல தண்ணீர் எடுப்பது வழக்கம்.  உண்மையில் அந்தக் குளத்து தண்ணீர் அப்படி ஒரு சுவை. உணவு இல்லை என்றாலும் அந்தக் குளத்து தண்ணீரை குடித்தே உயிர் வாழலாம்.   அந்த குளத்தினை எல்லோரும் மிகவும் சுத்தமாக இதுவரை பராமரித்து வந்தனர். 


ஆனால்  அந்த ஊரின்  அரசியல் செல்வாக்கு மிக்க பெரியவர் சுப்பையா, அந்த குளத்திற்கு பக்கத்தில் ஒரு இரசாயன தொழிற்சாலையை துவங்குவதற்கு அடிக்கல் நாட்டினர்.  அந்த விவரம் தெரிய வந்த ஊர் மக்கள்  செய்வதறியாது திகைத்து நின்றனர். அங்கு தொழிற்சாலை கட்டினால் அதிலிருந்து வரும் இரசாயன கழிவுகள் நிச்சயம் அந்த குளத்து நீரைப் பாதிக்கும் என்பது அனைவரின் கருத்து. அப்படிப்பட்ட குளமானது இனி என்ன ஆகும் என்ற பயம், அந்த ஊர் மக்களை தொற்றிக் கொண்டது. 




அந்த பிரச்சனையை பேசுவதற்காக அந்த பகுதி மக்கள் ஒன்று கூடினர்.  சுப்பையாவும் காசிநாதனும் வந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்தாள் இந்திரா. அவளது கையில் வழக்கமான மூங்கில் கோல்.


"சுப்பையா தாத்தா,  என்ன தாத்தா இப்படி செய்கிறீர்கள் . இங்கு போய் இரசாயன தொழிற்சாலை கட்டப் போகிறீர்களாமே?.  அதிலிருந்து வரும் கழிவுகள் நாம் குடிக்கும் நீரை பாழாக்காதா தாத்தா.? ‌ என்ன தாத்தா... நீங்க போய் இப்படி செய்கிறீர்கள்..? ஊர் மக்களுக்குத்  குடிக்க நல்ல தண்ணீர் வேண்டாமா?" என்று உரத்த குரலில் கேட்டாள்.


சுப்பையா உரக்கச் சிரித்தார். "ஏய் சின்னப்பொண்ணு! பெரியவங்க விஷயத்துல தலையிடாதே. போய் விளையாடு!" என்றார் அலட்சியமாக.


இந்திரா பின்வாங்கவில்லை. அவளது கண்களில் ஒரு புது ஒளி மின்னியது. சுப்பையாவின் கண்கள் முன்னால் போய்  நேராக நின்று, தன் மூங்கில் கோலை நிலத்தில் ஊன்றிப் பேசினாள்:


"‌நீங்கள் அனைவருக்கும் நல்லது செய்யும் அரசியல்வாதி.   இந்த ஊர் மக்கள் அனைவரும் இந்த குளத்து நீரை,  புனித நீராக கருதி , பாதுகாக்கிறார்கள்.  மக்களின் தேவையை மதிப்பது தானே நல்ல அரசியல்வாதிகளின் வேலை. நீங்கள் போய் இப்படி செய்கிறீர்கள்.?   நீங்கள் இந்த வேலையை நிறுத்தாவிட்டால்   ஊர்ச் சிறுவர் சிறுமிகள்  அனைவரும் சேர்ந்து இங்கு உண்ணாவிரதம் இருப்போம்.  எங்களுக்கு இந்த குளத்துத் தண்ணீர் பாதுகாக்கப்பட வேண்டும்.  !" என்று உறுதியான குரலில் கூறினாள். அனைவரும் வியந்து நின்றனர்.


ஒரு பத்து  வயதுச் சிறுமியிடம் இருந்து இத்தனை தெளிவான, கூர்மையான எதிர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த வார்த்தைகளில் இருந்த அதிகாரமும் நியாயமும் சுப்பையாவைத் திகைக்க வைத்தன. ‌பஞ்சாயத்து மரத்தடியில் கூடியிருந்த மக்கள் அனைவரும் சிறுமியின் துணிச்சலைக் கண்டு வியந்து  பாராட்டினர். பெரியவர்கள் யாரும் பேச தேவையற்ற போனது.


சுப்பையாவுக்குப் புரிந்தது—இவள் வெறும் சிறுமி அல்ல, தலைமைப் பண்பு கொண்ட ஒரு புயல் என்று.   இந்திராவின் பேச்சைக் கேட்டு திகைத்து நின்ற சுப்பையா , அதில் தொழிற்சாலை கட்டுவதை நிறுத்துவதாக கூட்டத்தில் ஒப்புக்கொண்டார். 


அன்று மாலை, அந்த குளத்திற்கு அருகில் நின்றபடி, சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திராவை ,அருகில் வந்து பார்த்த தந்தை காசிநாதன்  மெல்ல அவள் தோளைத் தொட்டார். "இன்னைக்கு நீ பண்ணது பெரிய விஷயம் இந்திரா.  எப்படி உனக்கு இப்படி ஒரு யோசனை  வந்தது."


எல்லாம் உங்களைப் பார்த்து தான்  என்ற இந்திராவை , கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை. இவள் வளர்ந்த பிறகு நிச்சயம் ஒரு நல்ல ஆளுமையாக வருவாள் என்று அவரின் உள் மனம் கூறியது.


இந்திரா தன் இரட்டைப்பின்னலைச் சரிசெய்தபடி புன்னகைத்தாள்: "இந்த ஊர் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா, நாம கேட்கனும் அப்பா. நான் கேட்பேன் என்று கூறிய இந்திராவின் கண்களில் அப்படி ஒரு  தன்னம்பிக்கை.!"


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)