உழைக்காத காசு!

Aug 03, 2026,05:02 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


மதிய வெயில் மண்டையைப் பிளந்தது. தங்கராஜ் பஸ் ஸ்டாண்ட் நிழற்குடையில் அமர்ந்து, தன் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் பேருந்து வரவில்லை. அவனுக்குத் தாகம் தொண்டையை அடைத்தது.

சுற்றுமுற்றும் பார்த்தபோது, சாலையோரம் ஒரு சிறிய தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார் பெரியவர் இராமலிங்கம். சுருக்கம் விழுந்த முகம், வியர்வை நனைத்த துண்டு, ஆனால் கண்களில் ஒரு நிதானம்.


தங்கராஜ் வண்டியை நெருங்கினான். "பெரியவரே, ஒரு கிலோ சாத்துக்குடி எவ்வளவு?" 


"எண்பது ரூபாய்ங்க தம்பி. நல்லா இனிக்கும், பச்சையா உரிச்சுத் தரவா?" என்று கனிவோடு கேட்டார் இராமலிங்கம்.


"இல்ல, அப்படியே குடுங்க."


பழங்களை எடை போட்டு பையில் வைத்தார் பெரியவர். தங்கராஜ்  தன் பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான். பெரியவர் தன் மடிப் பையைத் தடவிப் பார்த்தார்.


"தம்பி, சில்லறை இல்லையே... இப்பதான் கடையத் தொறந்தேன். வேற சில்லறைக் காசு இல்லையா?"

தங்கராஜ் பாக்கெட்டுகளைத் துழாவினான். ஒரு பத்து ரூபாய் நோட்டும், சில சில்லறை நாணயங்களும் மட்டுமே இருந்தன. மொத்தம் நாற்பத்தைந்து ரூபாய் தேறியது.


"இவ்வளவுதான் இருக்கு பெரியவரே. நான் வேணா பக்கத்துல கடைங்கள்ல சில்லறை மாத்திட்டு வரவா?" என்றான் தங்கராஜ்.




"வேண்டாம் தம்பி, வெயில் ஜாஸ்தியா இருக்கு. நீங்க பழத்தை எடுத்துட்டுப் போங்க. அப்புறமா எப்பவாவது இந்தப்பக்கம் வரும்போது மீதி காசைக் குடுங்க" என்றார் இராமலிங்கம், எந்தவித தயக்கமும் இல்லாமல்.


தங்கராஜ்விற்கு ஆச்சரியமாக இருந்தது. "பெரியவரே, நான் யாருன்னே உங்களுக்குத் தெரியாது. ஒருவேளை நான் காசு தராம ஏமாத்திட்டா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.


இராமலிங்கம் மென்மையாகச் சிரித்தார். "நீங்க படிச்சவரா இருக்கீங்க தம்பி. முப்பத்தஞ்சு ரூபாய் காசுக்காக நீங்க என்னை ஏமாத்த மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அப்படியே நீங்க தராமப் போனாலும், அது எனக்கு நஷ்டம் இல்லை, என் உழைப்புக்குக் கிடைச்ச அனுபவம்" என்றார்.


தங்கராஜ் நெகிழ்ந்து போனான். பழப் பையை வாங்கிக்கொண்டு பேருந்து ஏறி வீடு திரும்பினார்.


அடுத்த சில வாரங்கள் தங்கராஜ் விற்கு  அலுவலகத்தில் கடுமையான வேலை. அந்தப் பக்கமே போக முடியவில்லை. ஆனால், மனதில் அந்தப் பெரியவருக்குத் தர வேண்டிய முப்பத்தஞ்சு ரூபாய் கடன் ஒரு பாரமாகவே இருந்தது.


ஒரு ஞாயிற்றுக்கிழமை, வேண்டுமென்றே அந்த பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றான்.. அங்கே  அந்த ஐயாவின் தள்ளுவண்டி இல்லை. விசாரித்தபோது, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்களாக வரவில்லை என்றும், அவர் பக்கத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதாகவும் அங்கிருந்த டீக்கடைக்காரர் சொன்னார்.


முகவரியைக் கேட்டுக்கொண்டு தங்கராஜ் அந்த எளிய குடிசைப் பகுதிக்குச் சென்றான். ஒரு சிறிய ஓட்டு வீட்டின் திண்ணையில் இராமலிங்கம்  படுத்திருந்தார். அருகில் அவரது பேத்தி படித்துக் கொண்டிருந்தாள்.

"பெரியவரே..." என்று கூப்பிட்டான் தங்கராஜ் .


இராமலிங்கம் மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தார். அடையாளம் தெரிந்துவிட்டது. "வாங்க தம்பி... உடம்பு கொஞ்சம் சரியில்லை, அதான் கடைக்கு வரல. காசுக்காக இவ்வளவு தூரம் தேடி வந்தீங்களா?" என்றார் பலவீனமான குரலில்.


"ஆமாம் பெரியவரே, அன்னைக்கு நீங்க என்னை நம்பி பழம் கொடுத்தீங்க. இதோ உங்க முப்பத்தஞ்சு ரூபாய்" என்று ஒரு ஐம்பது ரூபாய் தாளை நீட்டினார்.


இராமலிங்கம் அதை வாங்கிக்கொண்டு, தன் பேத்தியைக் கூப்பிட்டார். "கவிதா, அந்தப் பெட்டியில இருந்து சில்லறை எடுத்துட்டு வாம்மா."


சிறுமி ஒரு பழைய டப்பாவைக் கொண்டு வந்தாள். இராமலிங்கம் அதில் கையை விட்டு, ஒரு பத்து ரூபாய் நோட்டையும், ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் எடுத்து தங்கராஜ் விடம் நீட்டினார்.


"பெரியவரே, மீதி பதினைந்து ரூபாய் உங்களுக்கே இருக்கட்டும். மருந்து மாத்திரை வாங்கிக்கோங்க"  என்றான் தங்கராஜ். 


இராமலிங்கம் கண்களில் ஒரு கம்பீரம் மின்னியது. "தம்பி, அன்னைக்கு நான் உங்களுக்குக் கொடுத்தது கடன், தர்மம் இல்லை. என் உழைப்புக்கு எண்பது ரூபாய் தான் விலை. இந்த முப்பத்தஞ்சு ரூபாய் என் நேர்மைக்குக் கிடைச்ச பரிசு. ஆனா, இந்த மீதி பதினைந்து ரூபாய் எனக்குச் சொந்தமில்லாத காசு. உழைக்காத காசு உடம்புல ஒட்டாது தம்பி, வாங்கிக்கோங்க" என்றார் உறுதியாக.


தங்கராஜ் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தையும் பத்து ரூபாயையும் வாங்கிக் கொண்டான்.  அந்த ஐயாவின் கைகளைப் பிடித்துக் கும்பிட்டான் தங்கராஜ். 


பெரிய காரில் வலம் வரும் தனக்கு இல்லாத ஒரு பெரிய மனமும், நேர்மையும், மனிதநேயமும் இந்த எளிய கூலித் தொழிலாளியிடம் இருப்பதை எண்ணி வியந்தபடி வீடு திரும்பினான் . அந்த 15  ரூபாய் அவனிடம் இருந்த பல லட்சங்களை விடப் பெரியதாக  தங்கராஜ்விற்கு தெரிந்தது.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்