ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

Sep 17, 2026,03:06 PM IST

- சுதா திருநாராயணன் 


2019ல் என் கணவரின் மாணவரின் அழைப்பில் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரத்திற்கு சென்றிருந்தோம்.  அப்பொழுது அந்த மாணவரும் என் கணவரும் கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த  பல நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து அளவளாவினர். 


என் கணவர் Dr.R.திருநாராயணன் திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் ஸம்ஸ்கிருத பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 


திருச்சி சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியிலும் பகுதி நேர ஸமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றியவர். பணிக்காலத்தில் ‘ரஸப்ரியா’ என்ற இண்டர் காலேஜ் ஸம்ஸ்கிருத அஸோசியேஷனுக்கு செயலாளராக இருந்து பல ஸம்ஸ்கிருத நாடகங்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்து மேடையிலும், திருச்சி வானொலியிலும் நடத்த வகை செய்தார். மற்ற காலேஜ் மாணவ மாணவிகளும் பங்கு பெறுவர். 


ஒருமுறை ‘மதிரா மத்தா’ என்ற தலைப்பில் திருச்சி வானொலிக்காக குடியின் சீர்கேடுகளை எடுத்துச்சொல்லும் நாடகத்திற்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆறு மாணவர்களும் நான்கு சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். என் கணவரும் மற்றொரு ஸம்ஸ்கிருத பேராசிரியரும் மிகத் திறமையுடன் மாணவ மாணவிகளை நாடக ஒத்திகைக்கு வரவழைத்து  திறம்பட நடிக்கச் செய்தனர். மாணவிகள் பலவித காரணங்களால் சிலமுறையே ரிஹர்சலில் பங்கேற்றனர். ஆனால் மாணவர்கள் ரெகுலராக வந்தனர். 




ஒலிப்பதிவு நாளன்று யாவரும் வானொலி நிலையத்தை அடைந்தனர். நாடகத்தின் ஒத்திகையை பார்த்த திருச்சி வானொலி நிலைய டைரக்டர் சற்றே அதிருப்தியுற்றார்.


"வசனம் பேசும்போது இமோஷன் இல்லை, எக்ஸ்பிரஷன் இல்லை, பாடம் போல் படிக்கிறீர்களே" என்றார்.


ஒரு மாணவி அதை கவனத்தில் கொண்டு தன் முறை வந்தவுடன் ‘துர்விதே’ என்று உணர்ச்சிகரமாக கூவி தன் பங்கு வசனத்தை ஏற்ற இறக்கங்களுடன் மிக அழகாக பேசி எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றாள். "துர்விதே" என்றால் "மதியற்றவனே"  என்று பொருள். 


ஓரிரு முறை மட்டுமே ஒத்திகைக்கு வந்தாலும் மிகச்சிறப்பாக வசனங்களை உரைத்து நாடகத்தையும் ஆசிரியரையும் சிறப்பித்தாள் அந்தப் பெண். அவர் வேறு யாருமல்ல, நமது பெருமைக்குரிய மாண்புமிகு மத்திய  அமைச்சர் (Minister for finance and corporate affairs)  திருமதி. நிர்மலா சீதாராமன்.


(என் கணவரிடம் 1985ல் படித்த அந்த மாணவரும்  அந்த நாடகத்தில் பங்கேற்றவர், இந்த நிகழ்ச்சிகளை பற்றி பேசி இருவரும்  பழைய நினைவுகளில் ஆழ்ந்தனர்.}


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்