இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!

Su.tha Arivalagan
Mar 02, 2026,12:18 PM IST

டெஹ்ரான்: இஸ்ரேல் படையினர் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் டெஹ்ரானில் உள்ள பிரபலமான காந்தி மருத்துவமனை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.


உள்ள காந்தி மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் இராணுவ நடவடிக்கையின் இரண்டாம் நாளில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வடக்கு டெஹ்ரானில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டுள்ளன.


இந்தத் தாக்குதலால் மருத்துவமனையின் கட்டிடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அங்கிருந்து வெளிவந்த வீடியோக்களில் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே கண்ணாடித் துண்டுகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் சிதறிக் கிடப்பதைக் காண முடிகிறது.




தாக்குதல் நடந்த சமயத்தில் அங்கிருந்த செவிலியர்கள், பச்சிளம் குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நோயாளிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு தெருக்களில் தங்க வைக்கப்பட்டனர்.


ஈரான் நாட்டுச் செய்தி நிறுவனங்கள் இச்சம்பவத்தை "சியோனிச-அமெரிக்கக் கூட்டுத் தாக்குதல்" என்று சாடியுள்ளன.


ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.


பிரமாண்டமான மருத்துவமனை


காந்தி மருத்துவமனை, சுமார் 32,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு நவீன மருத்துவக் கட்டமைப்பாகும். 2008-ஆம் ஆண்டு ஈரான் மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களால் தொடங்கப்பட்ட இது, ஈரானின் மருத்துவ சுற்றுலாவின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.


100 உள்நோயாளி படுக்கைகள் மற்றும் 40 தீவிர சிகிச்சை படுக்கைகள், 17 அதிநவீன மற்றும் உலகத்தரம் வாய்ந்த அறுவை சிகிச்சை அறைகள், நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கு 100 சொகுசு குடியிருப்புகள் என பல்வேறு வசதிகளுடன் கூடியது இந்த மருத்துவமனை.


மத்திய கிழக்கிலேயே அணுசக்தி மருத்துவத்தில் (Nuclear Medicine) மிகவும் நவீனமான மற்றும் தொழில்முறை சார்ந்த மருத்துவமனையாக காந்தி மருத்துவமனை, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


பாரம்பரிய ஈரானிய உணவகங்கள், பொது உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனையகங்கள். பிரத்யேக வாகன நிறுத்துமிடம், வங்கிச் சேவைகள் மற்றும் விரிவான தகவல் தொடர்பு வசதிகள்.அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் என சகலமும் இங்கு உள்ளது.


இந்தியாவுக்குத் தொடர்பு இல்லை


2008-ஆம் ஆண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவால் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது.


இது ஒரு தனியார் கூட்டு முயற்சித் திட்டமாகும். குறிப்பாக, ஈரானில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் மற்றும் மருத்துவமனை ஆகிய இரண்டையும் ஒரே வளாகத்தில் இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.


பெயரில் "காந்தி" என்று இருப்பதைக் கண்டு நாம் குழப்பமடைவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இதற்கும் இந்தியாவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. இந்த மருத்துவமனைக்கு மகாத்மா காந்தியின் நினைவாகவோ அல்லது இந்தியத் தொடர்பினாலோ இப்பெயர் சூட்டப்படவில்லை. இது டெஹ்ரானில் உள்ள காந்தி தெருவில் அமைந்துள்ளதால், அந்த இடத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.


இது முற்றிலும் ஈரானிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு ஈரானிய தனியார் நிறுவனம். இந்திய அரசாங்கத்திற்கோ அல்லது இந்தியாவில் உள்ள காந்தி குடும்பத்தினருக்கோ இதில் பங்கில்லை.


டெஹ்ரானில் உள்ள இந்த காந்தி தெரு 1970-களிலேயே மகாத்மா காந்தியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. ஈரான் மற்றும் இந்தியா இடையேயான நீண்டகால கலாச்சார மற்றும் நட்புறவின் அடையாளமாக அந்தத் தெருவிற்கு அவர் பெயர் வைக்கப்பட்டது. அந்தத் தெருவில் மருத்துவமனை அமைந்ததால் இதற்கு இப்பெயர் வந்தது. அதேசமயம், மருத்துவமனை வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.