ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு

Su.tha Arivalagan
Jun 11, 2026,11:46 AM IST

டெஹரான்: மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போர்க்காலச் சூழலுக்கு மத்தியில், சர்வதேச வர்த்தகத்தின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. 


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து ஈரான் ராணுவத் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தற்போதைய அசாதாரண சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு ஹார்மோஸ் நீரிணை முழுமையாக மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் தொடர்ந்து நீடிப்பதால், இந்த நீரிணையை எந்தவொரு வணிகக் கப்பலோ அல்லது சரக்குக் கப்பலோ கடந்து செல்ல அனுமதி இல்லை என்றும் ஈரான் ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹார்மோஸ் நீரிணை என்பது ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய கடல் வழித்தடமாகும். உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் இது மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.




உலக அளவில் நுகரப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20%க்கும் அதிகமான பங்கு இந்த ஹார்மோஸ் நீரிணை வழியாகவே பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தங்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய இந்த வழித்தடத்தையே பெரிதும் நம்பியுள்ளன.


இந்த நீரிணை முற்றிலும் மூடப்படுவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது உலக நாடுகளில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையையும், பணவீக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும்.


கடந்த சில மாதங்களாகவே மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும், ஈரானுக்கும் இடையே நிழல் யுத்தமும், நேரடித் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் ஆயுதமாக ஈரான் இந்த கடல் வழித்தடத்தை மூடியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கடல் வழித்தடங்களை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதியிலும் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.