மழை போற்றுதும் மாமழை போற்றுதும்!

Su.tha Arivalagan
Sep 29, 2026,04:06 PM IST

ஜெயபாரதி மதிவாணன்


மழை. அனைவருக்கும் பிடிக்கும். மழை இல்லை என்றால் உயிரினங்கள் இல்லை. தவறாமல் பெய்யும் மழை இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் அமிழ்தம் என்று சொல்லலாம். இளங்கோ அடிகள் தனது காப்பியத்தில் இறைவனுக்கு அல்ல. மழைக்குத்தான் முதல்இடம் அளிக்கிறார்.


"மாமழை போற்றுதும் மாமழை

போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு

அவன் அளிபோல்

மேல் நின்றுதான் சுரத்தலான்"


பெரும் மழையையே போற்றுவோம். அச்சத்தை விளைவிக்கும் கடலால் சூழப்பட்ட உலகிற்கு மன்னனின் கொடை போல மேலே இருந்து  தானே மழையைப் பொழிவதால் மாமழை போற்றுதும் என்று மழையைப் போற்றி பாடியுள்ளார்.




திருவள்ளுவர் கடவுளுக்கு அடுத்தபடி மழையைப் போற்றுகிறார். வான்சிறப்பு என்ற அதிகாரத்தில்

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 

துப்பாய தூஉம் மழை" என்கிறார். உண்பவர்க்கு நல்ல உணவுகளைத் தருவதோடு, தானும் உணவாக அமைவது மழை என்கிறார் வள்ளுவர்.


மேகத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால் பசும் புல்லின் நுனியைக் கூட காண முடியாது. அப்படி என்றால் மனிதர்களின் நிலைஎன்ன? மழை நீரை நாம் சேமிக்க வேண்டும்.


ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அழகாக மழையைப் பற்றிக் கூறுவார்.


"ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழிமுதல்வனுருவம் போல்மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!"


கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! நீ ஒன்றையும் மறைத்து வைக்காதே! கடலுக்குள் செல்! கடல் நீரை முகந்து கொள்! பேரொலியுடன் மேலே எழு; ஊழிக் காலத்திலும் கேடில்லாத திருமாலின் திருமேனி போல் உருவத்தே கருமை கொள்! பெருமையும் எழிலும் பொருந்திய பத்பநாபனின் கையில் விளங்கும் சக்கரத்தினைப் போல மின்னிட்டு விளங்கு! அவனது மற்றொரு கையில் விளங்கும் வலம்புரிச்சங்கு போல நின்று முழங்கு! 


அப்பெருமான் சாரங்கம் என்னும் வில்லிலிருந்து எய்யும் அம்பு மழை போல் உலகம் வாழவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந் தாழ்த்தாமல் பொழிவாயாக! என்று ரசித்து கூறுகிறார் ஆண்டாள்.

மழை பெய்வது சாதாரண நிகழ்வு. அதை திருமாலுடன் இணைத்து ரசித்துப் பாடியுள்ளார் ஆண்டாள்.


இதே போல் மாணிக்கவாசகரும் இறைவனையும் இறைவியையும் மழையுடன் பொருத்தி மகிழ்கிறார்.


". முன்னிக்கடலைச் சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்த தம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்த தம் பிராட்டி திருவடி மேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!"


மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக்கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடையவளாகிய உமாதேவியின் சிற்றிடையைப் போல பின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப்பெற்ற பொற்சிலம்பைப் போலச் சிலம்பி, திருப் புருவம் எனும் படி வானவில் குலவி நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான் அன்பர்களுக்கும் அருள முற்பட்டவள்.  .நமக்கும் முந்தி வந்து நெருங்கிச் சொரிகின்ற அன்னையின் இனிய அருளைப் போலப் பொழிவாயாக!


என்ன ஓர் அருமையான பக்தி.


சுந்தரர் தம் தேவாரத்தில்


"வையகம் முற்றும் மாமழை மறந்து, வயலில் நீர் இலை, மாநிலம் தருகோம்,

உய்யக் கொள்க மற்று எங்களை என்ன, ஒளி கொள், வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும்

பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்

செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன், செழும் பொழில் திருப்புன்கூர் உளானே!


உலகத்தில் மழை பொழியாமல் வயல்களில் நீர் இல்லாமல் வறண்ட காலத்தில் இறைவனிடம் மக்கள் முறையிட, இறைவன் வெண்மேகமாகப் பரவிப் பெருமழை பெய்யச் செய்து, பின் வெள்ளத்தைப் பெருக்காமல் காத்து அருள் புரிந்த அற்புதச் செயலைக் குறிப்பிடுகிறார். திருப்புன்கூர் சிவலோகநாதப்பெருமானின் பெருமையைச் சுந்தரர் இப்பாடலில் போற்றுகிறார். ஏயர்கோன் கலிகாமரிடம்12வேலி நிலம் பெற்றுமழை பெய்யச் செய்தார். பின்னர் வெள்ளம் வராமல் இருக்க12 வேலி நிலம் பெற்றார் இறைவன்.


மழையை நினைத்தாலே இனி இறைவனின் சிந்தனை நமக்கு வரும்தானே?


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)