உனக்கு ஆங்கிலம் தெரியாது!
- ஜெயபாரதி மதிவாணன்
பக்கத்து வீட்டைச் சேர்ந்த நந்தினியிடமும் ராஜியிடமும் என் கணவர் அடிக்கடி எனக்கு ஆங்கிலம் தெரியாததைக் கூறிக் கிண்டல் செய்வார். "உனக்கு ஆங்கிலம் தெரியாது என்று முன்பே தெரிந்திருந்தால், உன்னைத் திருமணமே செய்திருக்க மாட்டேன். நான் இங்கிலீஷ் மீடியத்தில் படித்தவன்!" என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.
ஒரு நாள் அவர் இப்படிச் சொன்னதும், நான் உடனே நந்தினியிடமும் ராஜியிடமும், "ஆறு மாதங்களுக்கு முன்பு நானும் மாமாவும் திருப்பதி சென்றிருந்தோம். அப்போது ரயிலில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி வந்தார். அவருடன் மாமா சரளமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஆங்கிலம் தெரியாததால், நான் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பலாப்பழச் சுளை விற்றுக்கொண்டு ஒருவர் வந்தார். மாமா அந்தப் பெண்மணியிடம், 'இந்தப் பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்' என்று ஆங்கிலத்தில் கூறினார். உடனே அந்தப் பெண்மணி, 'இதன் பெயர் என்ன?' என்று கேட்டார்.
மாமா என்னிடம் திரும்பி, 'இது என்ன பழம்?' என்று கேட்டார். எதிரில் இருந்த கிராமத்து மனிதர் 'பலாப்பழம்' என்றார். உடனே மாமா, 'ஆங்கிலத்தில் என்ன?' என்று என்னிடம் கேட்டார். நான் சட்டென்று 'Jackfruit' என்றேன். உடனே மாமா, 'Jackfruit' என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டு மீண்டும் தனது ஆங்கில உரையாடலைத் தொடர்ந்தார். இதுவும் ஒரு நிகழ்ச்சி!" என்று கூறினேன்.
"இன்னொரு நிகழ்ச்சியையும் சொல்கிறேன். கம்ப்யூட்டரில் கணக்குகளைப் பதிவு செய்யும்போது, 'கொத்தனார்' என்ற வார்த்தை வந்தாலே என்னிடம் வந்து, 'இதற்கு ஆங்கிலத்தில் என்ன?' என்று கேட்பார். நான் 'Mason' என்று சொல்வேன். இப்போது நீங்களே சொல்லுங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியுமா, தெரியாதா?" என்று கேட்டேன். உடனே நந்தினியும் ராஜியும், "மாமா, அத்தைக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறதே!" என்றனர்.
அதற்கு என் கணவர், "நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அத்தையை ஆங்கிலத்தில் பதில் சொல்லச் சொல்லுங்கள்!" என்றார். எட்டாம் வகுப்பு படிக்கும் நந்தினி உடனே, "ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அது அத்தைக்குத் தெரியவில்லை என்பதால் அது பெரிய குற்றமா? வேறு ஏதாவது தகவல் கேட்டால், அத்தை உடனே தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் சொல்வார்கள். அது தொடர்பான புத்தகத்தைக்கூட உடனே எடுத்துக் கொடுப்பார்கள். அதுவே போதும்!" என்றாள். அவளுடைய பதிலைக் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நான்கு நாட்கள் கழித்து, நந்தினியும் ராஜியும் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு வந்திருந்தார்கள். நானும் அவர்களும் எங்கள் வீட்டு வாசற்படியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வாசற்படிக்கு அருகில்தான் என் கணவரின் அலுவலக அறை இருக்கிறது. அங்கிருந்து திடீரென்று ஒரு குரல் கேட்டது. "ஜெயபாரதி, மோருக்கு ஆங்கிலத்தில் என்ன?" என்று என் கணவர் கேட்டார். நான் உடனே, "Buttermilk" என்றேன்.
ராஜி சிரித்துக்கொண்டே, "ஸ்பெல்லிங் சொல்லவா மாமா?" என்று கேட்டாள். அதற்கு அவர், "வேண்டாம் பாப்பா, எனக்குத் தெரியும்!" என்றார். இதைக் கேட்ட நந்தினியும் ராஜியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். "மாமா, அத்தைக்கு ஆங்கிலமே தெரியாது என்று சொல்லிவிட்டு, இப்போது அவர்களிடமே ஆங்கிலத்தில் கேட்கிறீர்களே! அவர்களும் சரியாகச் சொல்லிவிட்டார்களே!" என்று கிண்டல் செய்தார்கள்.
உடனே என் கணவர், "அத்தைக்கு இரண்டு மூன்று வார்த்தைகள்தான் தெரியும்!" என்றார். அதற்கு நந்தினியும் ராஜியும், "அந்த இரண்டு மூன்று வார்த்தைகள்கூட உங்களுக்குத் தெரியவில்லையே! அத்தைக்குத்தானே தெரிகிறது!" என்று சொல்லி மீண்டும் சிரித்தார்கள்.
அவர்கள் சிரிப்பைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது. அதை அடக்குவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே!
(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர். கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)