2000 ஆண்டுகளுக்கு முன்பே.. தூங்காமல் விழித்திருந்த மதுரை!

Su.tha Arivalagan
Oct 29, 2026,10:33 AM IST

- ஜெயபாரதி மதிவாணன்


மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயிலும், மல்லிகைப் பூவும், சுவையான உணவு வகைகளும் மட்டுமல்ல; இரவிலும் சுறுசுறுப்பாக இயங்கும் கடைவீதிகளும்தான்! அதனால்தான் மதுரையைத் ‘தூங்காநகரம்’ என்று அழைக்கிறோம். வியப்பூட்டும் செய்தி என்னவென்றால், சங்க காலத்திலேயே மதுரை தூங்காநகரமாக விளங்கியிருக்கிறது!


சங்கத் தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பெரும் தொகுப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றுதான் மதுரைக்காஞ்சி. 782 அடிகளைக் கொண்ட இந்நூலை மாங்குடி மருதனார் என்னும் புலவர் இயற்றியுள்ளார்.


இன்றைய மதுரையில் இரவு நேரத்திலும் பல கடைகள் திறந்திருக்கும். உணவகங்களிலும் உணவு வகைகளுக்குப் பஞ்சமில்லை. பிரியாணி, புரோட்டா, இட்லி, தோசை, பூரி எனப் பலவகையான உணவுகளை இரவிலும் வாங்கி உண்ணலாம். பகலிலும் இரவிலும் மக்கள் நடமாட்டம் நிறைந்திருப்பதால் மதுரை எப்போதும் விழித்திருக்கும் நகரமாகத் திகழ்கிறது.





இத்தகைய சிறப்பு இன்றைய மதுரைக்கு மட்டுமே உரியதல்ல. சங்க காலத்திலும் மதுரை வணிகச் சிறப்புடன், இரவு பகல் பாராமல் இயங்கும் நகரமாக விளங்கியிருக்கிறது என்பதை மதுரைக்காஞ்சி நமக்கு எடுத்துரைக்கிறது.


பகல் நேரத்தில் நடைபெறும் கடைகள் நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் நடைபெறும் கடைகள் அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. ‘அல்’ என்பது இரவைக் குறிக்கும். பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் கடைகள் திறந்து வணிகம் நடைபெற்றதை மாங்குடி மருதனார் தமது பாடலில் அழகாக எடுத்துரைக்கிறார்.


அந்தக் கடைகளில் விற்கப்பட்ட பொருட்களையும், அங்கு நிலவிய வணிகச் செழிப்பையும் அவர் வர்ணிக்கிறார். இதனை விளக்குவதற்கு அவர் கையாளும் உவமைதான் வியப்பில் ஆழ்த்துகிறது!


கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி மழையாகப் பொழிந்தாலும் கடல் நீர் குறைவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலந்தாலும் கடல் பொங்கி வழிவதில்லை. அதுபோல, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கினாலும் கடைகளில் உள்ள பொருட்கள் குறைவதில்லை. பல்வேறு இடங்களிலிருந்து வணிகர்கள் பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வதால், கடைகளில் பொருட்கள் அளவுக்கு அதிகமாகக் குவிந்துவிடுவதுமில்லை. விற்பனையும் வரத்தும் சமநிலையில் நடைபெறுகின்றன என்பதை இவ்வுவமை மூலம் புலவர் உணர்த்துகிறார்.


இதனை மாங்குடி மருதனார் அழகிய சொற்களில் பாடுகிறார்:


"மழை கொளக் குறையாது புனல்புக மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல, கொளக் கொளக் குறையாது, தரத்தர மிகாது"

.

என்ன அருமையான உவமை! இயற்கையின் இயல்பை எடுத்துக்காட்டி, அன்றைய மதுரையின் வணிகச் சிறப்பை எவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கிறார்!


இன்றைய மதுரையின் தூங்காநகரச் சிறப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகலிலும் இரவிலும் வணிகம் செழித்த நகரமாக மதுரை விளங்கியிருக்கிறது என்பதை நினைக்கும்போது நம் வியப்பு மேலும் அதிகரிக்கிறது.


மதுரை தூங்காநகரம் மட்டுமல்ல; சங்கத் தமிழரின் வணிகச் செழிப்புக்கும், நகர நாகரிகத்துக்கும் சான்றாக விளங்கும் பழம்பெரும் நகரமும்கூட!


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)