தப்பாக நினைப்பார்கள்!!!

Su.tha Arivalagan
Oct 05, 2026,01:44 PM IST

- ஜெயபாரதி மதிவாணன்


என் கணவரும் நானும் அவர் நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். நண்பர் என்றால் எங்கள் விருதுநகரில் "கர்மவீரர் காமராஜர் 6-ம் வகுப்பு வரை படித்த K.V.S. பள்ளி"யில் 6-ம் வகுப்பிலிருந்து 11-ம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி  ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். அப்போது+2 கிடையாது.காலேஜில் P.U.C. என்று ஒரு வருடம் படித்துப் பின் மேற்படிப்புப் படிப்பார்கள். அப்படி ப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் 20 பேர் இப்போதும் இணைப்பில் இருக்கிறார்கள்.


ஒவ்வொருத்தர் வீட்டுக் கல்யாணம், பேரனுக்குப் பேத்திக்குக் காதுகுத்து, போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். நண்பர்கள் 20 பேர் ஒரு வட்டம். அவர்களது மனைவிமார்களாக நாங்கள் ஒரு வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்.


அப்படி ஒரு நண்பர் வீட்டிற்குத்தான் ஒரு நாள் சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த கம்ப்யூட்டரைக் காட்டி "நீங்கள் பயன்படுத்துவீர்களா? "என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர்" எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லித் தாருங்கள்" என்றார். "உங்கள் பையன் பாஸ்வேர்டு போட்டு வைத்திருந்தால் நம்மால் கம்ப்யூட்டரை ஓப்பன் பண்ண முடியாது. என்னிடம் உள்ள இலக்கிய கலெக்க்ஷன் CDயை உங்களிடம் தருகிறேன். உங்கள் பையனை அதைப் பதிந்து கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் வைக்கச் சொல்லுங்கள். நீங்கள் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்தவுடன் இலக்கிய கலெக்ஷன் என்பதை டபுள் க்ளிக் செய்தால் அதில் உள்ள புத்தகங்கள் தேவாரம்,திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், நீதி நூல்கள் ஆகியவற்றில் உங்களுக்குத் தேவையானதைப் படிக்கலாம்" என்றேன்.

 



பிறகு வீட்டிற்கு வந்தவுடன் என் மகன் ராஜாவிடம் சொன்னேன். "அவர்களுடன் பேசும்போது " ஐகான்" என்ற வார்த்தை நினைவுக்கு வரவில்லை" என்று கூறிவிட்டு நான் அவர்களிடம் பேசியதைச் சொன்னேன். ராஜா என்னை முறைத்துப் பார்த்து " யாரிடமும் நீங்கள் கம்ப்யூட்டரைப் பற்றிப் பேசாதீர்கள். அவர்கள் உங்களைத்  தப்பாக நினைப்பார்கள்" என்றான். 


எனக்கு "திக்" என்று இருந்தது. நான் பொதுவாக அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றே நினைப்பவள். மதினிகளிடமும், நாத்தனார் களிடமும், என் உடன்பிறந்த அக்கா, தங்கை, தம்பியுடன் நல்லவிதமாகவே நடந்துகொள்வேன். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.அவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பது வேறுவிசயம். மற்ற உறவினர்களில் யாராவது என்னை எந்தக் காரணமும் இன்றி தவறாக நினைக்கிறார்கள் என்றால் நான் அவர்களிடமிருந்து விலகிவிடுவேன். அப்படிப்பட்ட என்னை ராஜா இவ்வாறு கூறியவுடன் இதயத்துடிப்பு அதிகமாகத் தொடங்கியது. இல்லை! இல்லை !! எகிறிக் குதித்தது. வியர்த்தது. லேசாக நெஞ்சு வலிப்பது மாதிரி தெரிந்தது.


நாம் ஒன்றும் தப்பாகப் பேசவில்லையே என்ற எண்ணத்துடன், சற்றே பயத்துடன் ராஜாவிடம் " ஏன் தம்பி?" என்றேன்.


அவன் "உங்களுக்குக் கம்ப்யூட்டரைப்பற்றி நன்றாக தெரியும் என்று தப்பாக நினைப்பார்கள். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது எனக்குத் தான் தெரியும்" என்று சொல்லிச் சிரித்தான். என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)