எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

Oct 05, 2026,01:19 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


காசி  இராமேஸ்வரம்

சென்று வர 

எனக்கு ஆசை! 


காஷ்மீர் சிம்லா 

சென்று வர

உனக்கு ஆசை! 


மின் விசிறி

போதும் என்பது 

என் விருப்பம்! 


குளிர்சாதன வசதிக்கு 

ஆசைப்படுவது 

உன் வழக்கம்! 




தயிர் சாதம் 

போதும் என்பது 

எனது கருத்து! 


பிரியாணி சாப்பிடலாம் 

என நினைப்பது

உனக்குப்  பிடிக்கும்!


இரு சக்கர வாகனத்திலேயே 

திருப்தி அடைந்து விடும் 

என் மனம்! 


கார் நம்மிடம்

இல்லையே என

ஏங்கும் உன் மனம்! 


கடன் இல்லாமல் 

இருக்கிறோமே என 

சந்தோஷப்படும் என் மனம்! 


இன்னும் வாடகை வீட்டில் 

இருக்கிறோமே என்று 

வருத்தப்படும் உன் மனம்!


விமானத்தில் ஒரு மணி நேரம் 

பயணித்ததில் பறந்து 

மகிழ்ந்தது என் மனது! 


கப்பலில் இப்போது வரை 

செல்லவில்லையே என்ற 

ஆதங்கம் உனக்கு! 


இப்படி இரு வேறு துருவங்களாக 

நாம் இருந்த போதிலும் 

நமக்குத் திருமணம் முடிந்து 


 35 ஆவது ஆண்டில்

தொடர்வது

உன்னை நான் நேசிப்பதும் 

என்னை நீ நேசிப்பதும் 


இறைவன் நம்மோடு 

இருப்பதாலும் 

அல்லவா! 


நன்றி சொல்வோம்! 

இறைவனுக்கு! 

நன்றாய் வாழ்வோம் 


இன்னும்

பல 

யுகங்களுக்கு! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்