அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை பயன்படுத்துவதால் மட்டுமே அதிமுகவின் ஓட்டுகள் விஜய்க்கு போகாது. ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், செங்கோட்டையன் அவர்கள் மறப்போம், மன்னிப்போம் என்று கூறியுள்ளார். செங்கோட்டையன் விவகாரம் குறித்து பொதுச் செயலாளர் தான் முடிவு செய்ய வேண்டும். எம்ஜிஆர், அண்ணா ஆகிய தலைவர்கள் உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள். எங்கள் தலைவர்கள் படங்களை தவெக கட்சியினர் உபயோகிப்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் தான்.
எங்களுடைய தலைவரை உலகம் முழுவதும் உள்ள எல்லா தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாபெரும் தலைவராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அதேநேரத்தில் ஓட்டுக்கள் வருமா, வராத என்பது சந்தேகம்தான். கண்டிப்பாக அதிமுக ஓட்டு என்பது எம்ஜிஆர், அண்ணா படத்தை வைப்பதால் மட்டும் அந்த ஓட்டுகள் விஜய்க்கு போகாது. அது மட்டும் மிக உறுதியாக கூறுகிறேன்.
அண்ணாவை வணங்கட்டும், போற்றட்டும். பேருந்தில் அண்ணா, எம்ஜிஆர் தலைவர் படங்களை பதியட்டும். அதில் எங்களுக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால், அதுவே அண்ணா திமுகவின் ஓட்டு விஜய்க்கு போகுமா என்றால் போகாது. விஜய்க்கு வெறும் ஏமாற்றம் தான் மிஞ்சும். முன்பு விஜய் ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசும்போது, ஸ்டாலின் அங்கிள் என்று குறிப்பிட்டார். பின்னர், சிஎம் சார் என்று குறிப்பிட்டார். சிஎம் சார் என்று சொல்லியதற்கு பதிலாக சிஎம் சாத்தான் சார் என்று சொல்லியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.