முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

Su.tha Arivalagan
Sep 08, 2026,11:12 AM IST

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளன.


மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி அவை வருகை:


சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகளின் போது தனது உடல்நலக் குறைவு குறித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "நேற்று முன் தினம் எனக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் எனக்கு ரத்த அழுத்தம் குறைவாக (Low Pressure) இருப்பதாகவும், கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஆனால், நமக்கு ஒரு அற்புதமான முதல்வர் கிடைத்திருக்கிறார். அவர் சட்டமன்றத்தில் பேசும்போது நான் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்பதால், மருத்துவர்களின் கடுமையான எச்சரித்ததையும் மீறி அவை நிகழ்வுகளுக்கு வந்தேன்" என்று குறிப்பிட்டார்.


"மருத்துவர் இல்லாமலே கிடைத்த சிகிச்சை" – நகைச்சுவையான விமர்சனம்:




தொடர்ந்து பேசிய அவர், அவையில் நடந்த சில நிகழ்வுகளைக் சுட்டிக்காட்டி சுவாரசியமாகவும் காரசாரமாகவும் பேசினார். "நல்ல வேளையாக, அவையில் எதிர்த்தரப்பினர் நடந்து கொண்ட முறையைப் பார்த்ததும், எனக்கு மருத்துவரே இல்லாமலேயே சிகிச்சை கிடைத்தது போல் ஆகிவிட்டது! குறைந்து போயிருந்த எனது ரத்த அழுத்தம் (Pressure) சட்டென்று அதிகமாகி இயல்பு நிலைக்கு வந்துவிட்டது" என்று குறிப்பிட்டது அவையில் பெரும் கவனத்தைப் பெற்றது.


முதல்வர் விஜய் விதிமுறைகளுக்கு உட்பட்டே பேசினார்:


சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் உரை குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த சபாநாயகர், "முதல்வர் விஜய் சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பாகவோ அல்லது அவைக்கு அப்பாற்பட்ட முறையிலோ எதுவும் பேசவில்லை. அவர் முழுமையாகச் சட்டமன்ற மாண்புகளையும் விதிகளையும் பின்பற்றியே தனது உரையாடலை மேற்கொண்டார்" எனத் தெளிவுபடுத்தினார்.


திமுக உறுப்பினர்கள் மீது வருத்தம்:


அதேவேளையில், திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய சபாநாயகர், "சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற மாண்பு மற்றும் நடைமுறைகள் திமுகவிற்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும், திமுக உறுப்பினர்கள் அவையைச் சரியாக நடத்த விடாமல் தொடர்ந்து தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்? சட்டமன்றத்தின் ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திமுகவினர் செய்த இந்தச் செயல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது" எனக் கடுமையான சொற்களால் சுட்டிக்காட்டினார்.