உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!

Su.tha Arivalagan
May 16, 2026,05:02 PM IST

- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா


"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்."

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்."


ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த செல்வம் அவனது உடல் ஆரோக்கியமே ஆகும். நம்மிடம் எவ்வளவுதான் திறமைகளும் வசதிகளும் இருந்தாலும், ஆரோக்கியமான உடல் இல்லை என்றால் எதையுமே அனுபவிக்க முடியாது.


பசி அறிந்து உண்




சுண்ட பசித்த பின் புசி என்பார்கள்.. அதாவது நன்றாகப் பசித்த பிறகே சாப்பிட வேண்டும். சுவைக்காகச் சாப்பிடுவதை விட, பசிக்காக மட்டுமே சாப்பிடப் பழக வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்..  பசியின் கொடுமை அத்தகையது என்பதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.


நொறுக்குத் தீனிகளைக் குறை.. இது மிக மிக முக்கியம். உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது நல்லது. பல உடல் நல உபாதைகளுக்கு இந்த நொறுக்கு தீனிகளே காரணம்.


ஔடதம் குறை.. கண்ட மாத்திரைகளையும் மருந்துகளையும் உண்பதைக் குறைத்து, உணவையே மருந்தாக்க வேண்டும்.


உடற்பயிற்சியின் முக்கியத்துவம்


உடலினை உறுதி செய்..  நம் சிந்தனையை வளர்க்க மூளைக்கு வேலை கொடுப்பது போல, உடல் ஆரோக்கியத்தைப் பேண உடல் அசைவுகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.


தினசரி உடற்பயிற்சி.. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வதை ஒரு தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.


உடற்பயிற்சி நம்மை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறது, உடலுக்கு ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது மற்றும் மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.


வாழ்வியல் நெறிமுறைகள்


காலை மற்றும் மாலை வேளைகளில் காற்று வாங்கி (நடைப்பயிற்சி) வருபவர்களைக் கண்டால், காலன் (எமன்) கூட பயந்து ஓடிவிடுவான். அதாவது அவர்களின் ஆயுள் கூடும்.


உடல் உழைப்பை உறுதியாக்கிக் கொண்டு சோம்பலின்றி வாழ வேண்டும்.


ஏவா மக்கள் மூவா மருந்து.. சொல்லாமலேயே குறிப்பறிந்து கடமைகளைச் செய்யும் பிள்ளைகள், பெற்றோருக்கு முதுமையைத் தள்ளிப்போடும் அமிர்தம் போன்றவர்கள்.


உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே!


(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).