சிந்திக்க சில நொடிகள்.. வாழ்க்கையை வசப்படுத்த 5 பொன்னான விதிகள்!

Su.tha Arivalagan
Feb 06, 2026,03:06 PM IST

- டி ஜெனிட்டா ரீனா


வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்பதை விட, எப்படி ஓடுகிறோம் என்பதுதான் முக்கியம். நம் மனப்போக்கை மாற்றினால், இந்த உலகமே நம் வசப்படும். 


தேடலே பாதையை உருவாக்கும் - நம்மில் பலர் "எனக்கு வழி தெரியவில்லை" என்று புலம்புவதிலேயே நேரத்தைச் செலவிடுகிறோம். ஆனால், பாதைகள் தானாக உருவாவதில்லை; நாம் நடக்கும்போதுதான் அவை உருவாகின்றன. இலக்கை அடைவது எப்படி என்று நீங்கள் யோசிக்கத் தொடங்கும் அந்த நொடியே வெற்றிப் பயணம் தொடங்கிவிடுகிறது.


"வானகமே உன் அரியணை, மண்ணகமே உன் கால்மணை" என்ற உயர்ந்த எண்ணத்தோடு செயல்படுங்கள். உலகம் உங்களுக்குக் கீழ்ப்படியும்.




அர்ப்பணிப்பு ஒருபோதும் தோற்பதில்லை - விதைத்தவுடன் பலனை எதிர்பார்ப்பது அறியாமை. ஒரு செயலை முழு மனதோடும், தளராத அர்ப்பணிப்பு உணர்வோடும் செய்யப் பழகுங்கள். நீங்கள் செய்யும் உழைப்பு உண்மையானதாக இருந்தால், அதன் பலன் இன்று இல்லாவிட்டாலும், ஒருநாள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும். உழைப்பிற்கு என்றும் ஊதியம் உண்டு.


'நாளை' என்பது ஒரு மாயை - வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருக்கும் மிகப்பெரிய தடையின் பெயர் "நாளை". இன்று மட்டுமே நம் கையில் இருக்கும் நிஜம். ஒரு வேலையைத் தள்ளிப்போடுவது என்பது உங்கள் வெற்றியை நீங்களே தள்ளி வைப்பதாகும். இன்று செய், இப்போதே செய் என்பதே வெற்றியாளர்களின் தாரக மந்திரம்.


பயத்தை எறிந்து பயணத்தைத் தொடங்கு - தேவையில்லாத கற்பனைகளும், எதிர்மறை எண்ணங்களும் நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கையை அரித்துவிடும். எதைக் கண்டு பயப்படுகிறோமோ, அது நம்மை அடிமையாக்கும்.


"பயத்தை விட்டொழி; தூர எறி; பயணம் இனிதாக அமையும்."


பயத்தை தூக்கியெறிந்தால் மட்டுமே, உங்களுக்குச் சேர வேண்டிய நன்மைகள் உங்களை வந்தடையும்.


மனவலிமையே உமது கவசம் - இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம். சிலரை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கவலைப்படுவதை விட, எதையும் தாங்கும் மனவலிமையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது. உங்கள் மனது உறுதியாகிவிட்டால், எந்தச் சூழ்நிலையிலும் யாராலும் உங்களை வீழ்த்த முடியாது.


இந்த ஐந்தையும் உங்கள் வாழ்க்கையின் அடிநாதமாக மாற்றிக்கொண்டால், வெற்றி என்பது ஒரு இலக்கல்ல, அதுவே உங்கள் வாழ்க்கையாக மாறும்.


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)