தாவீதின் குலத்திலிருந்தே மீட்பர் தோன்றுவார்.. அவதரித்தார் இயேசுநாதர்!
Apr 11, 2026,02:24 PM IST
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
பெத்லகேமில் வாழ்ந்த ஈசாய் என்பவரின் கடைசி மகன்தான் தாவீது. அவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். சிறுவனாக இருக்கும்போதே இறைவன்மேல் மிகுந்த பற்று உடையவராக இருந்தார்.
இஸ்ரயேலரின் அடுத்த அரசராகத் தேர்ந்தெடுப்பதற்காக, இறைவனின் கட்டளைப்படி இறைவாக்கினர் சாமுவேல் பெத்லகேமிற்குச் சென்று தாவீதைத் திருநிலைப்படுத்தினார் (அபிஷேகம் செய்தார்). அன்றிலிருந்து ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.
தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுல் அரசரின் படையில் பணிபுரிந்து வந்தார்கள். ஒருநாள் ஈசாய் தாவீதை அழைத்து, "உன்னுடைய சகோதரர்களுக்குப் பலகாரங்களைக் கொடுத்துவிட்டு, அவர்களைப் பார்த்துவிட்டு வா" என்று அனுப்பினார். தாவீது போர்க்களத்திற்குச் சென்றபோது, இஸ்ரயேலருக்கும் பெலிஸ்தியருக்கும் போர் நடக்கத் தயாராக இருந்தது.
அப்போது பெலிஸ்திய வீரன் கோலியாத் என்பவன் இஸ்ரயேலரைப் பற்றி இழிவாகப் பேசி, "என்னோடு போரிட உங்களில் யாராவது தயாரா?" என்று சவால் விடுத்தான். அவனது உருவத்தைக் கண்டு இஸ்ரயேலர் அனைவரும் அஞ்சி நின்றனர்.
தாவீது சவுல் அரசரிடம் சென்று, தான் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும், எந்தக் கவசமும் இன்றி, வெறும் ஒரு கவணையும் ஐந்து கற்களையும் எடுத்துச் சென்றார். கவணில் ஒரு சிறிய கல்லை வைத்து கோலியாத்தின் நெற்றியை நோக்கி எறிந்தார். அந்தக் கல் நெற்றியில் பாய்ந்ததும் கோலியாத் சுருண்டு விழுந்து இறந்தான்.
இந்த வெற்றிக்குப் பிறகு, காலம் கனிந்தபோது தாவீது இஸ்ரயேலின் அரசரானார். அவர் இறைவனுக்கு அஞ்சி நடந்ததாலும், அவர் துதிப் பாடல்களைப் பாடிப் புகழ்ந்ததாலும் இறைவனின் துணை எப்போதும் அவரோடு இருந்தது.
மனிதன் என்ற முறையில் தாவீது சில தவறுகளைச் செய்தாலும், அதற்காக அவர் உள்ளம் உருகி மனம் வருந்தினார் (சங்கீதம் 51). இதனால் அவருக்கு இறைவனின் மன்னிப்பு கிடைத்தது. "தாவீதின் குலத்திலிருந்தே மீட்பர் தோன்றுவார்" என்ற இறைவாக்கின்படி, இயேசு கிறிஸ்து தாவீதின் குலத்தில் பிறந்தார்.