சதுர கிணறும் புளிய மரமும் பின்னே அமெரிக்கன் கல்லூரியும்!
- ஜோசப் சாம்ராஜ்
அமெரிக்கன் கல்லூரிக்கு முதல் நாள் நான் செல்ல வேண்டும். நண்பன் முத்து அதிகாலை தேடிவந்தான். ஜோ வா கிணற்றில் குளிக்க போகலாம் என்று அழைத்தான்.
ஓகே என்று சொல்லி விட்டு அவன் கூட சென்றேன். சாலையில் வரிசையாக நின்ற புளியமரம் பார்த்தவுடன் புளியம் பழம் வேண்டும் என்று கல்லால் எறிந்தான். குறி தப்பியது. ஜோ நீ தான் அர்ச்சுனன் மாதிரி திறமைசாலி என்று புகழ்ந்து பேசினான். நானும் அவன் பேச்சில் கிறங்கி சீப்பு கல் எடுத்து சரியாக எறிந்தேன்.
புளியம் பழம் விழும் அதே நேரத்தில் அதே கல் எதிராக வந்து லாரியில் கண்ணாடியில் விழுந்து கண்ணாடி சிதறியது. அவ்வளவு தான் இருவரும் பிடித்தோம் ஓட்டம். கரிசகாட்டு மண்ணில் பிடரி தெறிக்க எங்கள் பின்னால் லாரி ஓட்டுனர் மிகவும் விரைவாக வந்து கொண்டிருந்தார்.
முயலை துரத்தும் நாயை போல. மூச்சுவாங்கியது. வேற வழியில்லாமல் இருவரும் கிணற்றில் குதித்தோம். மூச்சு தாக்குபிடிக்க முடியாமல் மேலே வரும் போது ஒரு கை எங்கள் தலையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஒரு இடத்தில் விட்டது. எங்கே தெரியுமா.. வேற எங்கே.. காவல் நிலையம்!
கல்லூரி போக வேண்டிய ஜோ காவல்நிலையத்தில். என்ன செய்ய விசாரணை நடந்தது. நண்பனுக்கு விழுந்த அடியில் எனக்கு வயிறு பிசைந்து எதோ வெளியே நீராக போனது. நல்லவேளை எனக்கு அடியில்லை. என் வீட்டிற்கு தகவல் போனது. ஜோ லாரியில் விழுந்து போய் விட்டான் என்று தவறான செய்தி போய் சேர்ந்தது.
பதறி அடித்து வந்த என் அப்பா உயிருடன் இருந்த என்னை தழுவி முத்தமிட்டார். பின்னர் இரு அப்பாக்களும் அபராதம் கட்டினர். இனி இருவரும் பேசக்கூடாது என்று இருவர் வீட்டிலும் சொல்லப்பட்டது. சதுர கிணறும் புளிய மரமும் எங்கள் வருகைக்காக இன்னும் தவம் இருக்கிறது.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)