Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
- ஜோசப் சாம்ராஜ்
என் பெயர் ரவி. நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து லோன் போட்டு முதலில் ஒரு வேன் வாங்கினேன். எனது உண்மை மற்றும் நேர்த்தியான உழைப்பு காரணமாக ஒன்று நான்கு வேன்கள் ஆகிவிட்டது. நன்றாக ஓடி நானும் நாலு காசு சம்பாதிக்கும் நேரத்தில் பெரிய இடியாக கொரோனா காலம் வந்து சேர்ந்தது.
என்னால் டியூ கட்ட இயலவில்லை. வேன் இயங்கவில்லை. என் வாழ்வில் பெரிய சுனாமி போல வேன்கள் எல்லாம் மூழ்கி போனது. இதிலிருந்து நான் மீளவே பல வருடங்கள் ஆகிவிட்டது. எப்படியோ தட்டுத்தடுமாறி இரண்டு பெண் குழந்தைகள் திருமணமாகி சென்றது. அதே நேரத்தில் அடுத்த அடி தலையில் விழுந்தது.
ஆன்மிக சுற்றுலா சென்ற என் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக இறைவனிடம் சென்று விட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் கரையில் நின்ற எனை ஒருவர் கரம் பற்றி அழைத்து சென்று வேன் டிரைவர் ஆக்கி மாதச் சம்பளம் கொடுத்து வாழவைக்கிறார். இப்போது அந்த வேனில் பயணம் செய்தவர் கம்மலை காணவில்லை என்று காவல்துறைக்கு போன் செய்யப்போவதாக மிரட்டுகிறார்.
ஊருக்கே தெரியும் ரவி எவ்வளவு நல்லவன் என்று. கடைசியில் கம்மல் கிடைத்ததாகவும் சேலை மடிப்பில் கிடந்ததாகவும் மன்னிப்பு கேட்டும் கால் பண்ணி கூறிவிட்டு ரூ5000 பணப்பரிசு தரவும் காத்திருந்தார். ரவி எதையும் வாங்கவில்லை.
நேர்மை எப்போதும் வாழவைக்கும். காந்தி ஜெயந்தி அன்று நாங்கள் அதே வேனில் கன்யாகுமரி சுற்றுலா செல்லும் போது தான் இந்த கதையை ரவி என்னிடம் பகிர்ந்து கொண்டார். இருவரும் நிலா தேனீர் கடையில் தேனீர் பருகினோம். மாலை சூரியன் செவ்வானத்தில் தன் முகத்தை மறைத்துக்கொண்டான்.
நாட்டின் விடுதலைக்காக மகாத்மா உண்மையாக போராடினார். ரவியை போல நம்நாட்டில் பலர் நேர்மையாக வாழ்வது காந்தி நமக்கு கற்றுக் கொடுத்தது தானே.
நானும் எமது மாணவர்கள் கிட்ட அடிக்கடி சொல்வேன் உண்மையும் நேரம் தவறாமை நம் வாழ்வில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று. ரவியை போல எத்தனையோ நபர்கள் இருப்பதால் தான் ஊரில் நல்ல மழை பொழிகிறது.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)