தீராத விளையாட்டுப் பிள்ளைகள்!!

Su.tha Arivalagan
Oct 22, 2026,01:37 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


அன்று கல்லூரி மிகவும் பரபரப்பான நிலையில் இருந்தது. கல்லூரி முதல்வர் அறையின் முன்பாக உள்ள கரும்பலகையில் இன்று காலை ஒன்பது மணிக்கு வெடிகுண்டு வெடிக்க போவதாக அறிப்பு எழுதியிருப்பதாக எமது விடுதியில் மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். 


செமஸ்டர் தேர்வு இன்று இருக்காது என்றும் போலிஸ் மோப்ப நாய் வர இருப்பதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மாணவர்கள் எங்கே வெடிக்கும் என்று சொல்லி கொஞ்சம் விவாதித்து கொண்டு இருந்தனர். ஒரு சிலர் எதையும் கண்டு கொள்ளாமல் கல்லூரி கிளம்பி கொண்டு இருந்தார்கள். 


காலை மணி 9 அடிக்கும் அதே நேரத்தில் டமார் என்ற சப்தம் காதை பிளந்தது. பயம் தொற்றிக் கொண்டது. எங்கள் விடுதிக்குள் தான் சப்தம். சற்று நேரத்தில் படபடவென்று பாதுகாவலர்கள் வந்தார்கள். நாங்கள் எப்போதும் குளிக்கும் நாலாவது பாத்ரூமிலிருந்து தான் சப்தம். ஆம் அங்கு தான் குண்டு வெடிப்பு. 




எதோ பெரிய டெர்மினேட்டர் இல்லை. தீபாவளிக்கு வெடிக்கும் சாதா வெடிகுண்டு தான். செய்தி கல்லூரி எங்கும் தீயாக பரவியது. வெடிகுண்டு புகையும் மற்றும் கூட்டமும் மேலும் எல்லாரையும் பதட்டம் அடையச் செய்தது. என்ன எப்படி என்று ஆராய்ச்சி செய்ய ஒரு டீம் வந்து சேர்ந்தது. விடுதியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 


ஏற்கனவே இந்த சம்பவம் காரணமாக கல்லூரி விடுமுறை என்று சொல்லி விட்டார்கள். பெண்கள் விடுதியில் என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று பயத்துடன் கேட்டார்கள். மாலாக்கா நான் பயப்படுவேன் என்று நினைத்து கல்லூரி கேன்டின் அழைத்து சென்றார். நான் பொதுவாக ரொம்ப பயந்த சுபாவம். சன்டை நடக்கும் இடத்தில் எனை பார்க்க கூட முடியாது. 


என் அப்பா சிறந்த வீரர். அவரும் இதே கல்லூரியில் படித்தார் என்பது எனக்கு பெருமை. சற்று நேரத்தில் என்னை தேடி அழைப்பு வந்தது. ஏன் எதற்கு என்று கூட தெரியவில்லை. மனசு பட பட வென அடித்தது. மாலாக்கா என் கையை எடுத்து பிடித்து கொண்டார். எனை அழைத்து சென்றதை அனைவரும் பார்த்தார்கள். இவனா இவனா என்று. உலகத்திற்கே தெரியும் இவன் ஒரு அப்பிராணி என்று. 


விசாரணை குழுவிற்கு அழைத்து சென்றார்கள். நான் எனது பாசமிகு நண்பர்களை தேடினேன். யாரையும் காணவில்லை. திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல என் நிலைமை. மனசு மிகவும் அமைதியாக இருந்தது. தலைமை விசாரணை அதிகாரி கேள்வி கேட்டார். பெயர் என்ன எந்த ஊர் என்று. அமைதியாக பதில் கூறினேன். அதற்குள் காட்டு தீயாக செய்தி பரவியது. என்னை விடுவிக்க வேண்டும் என்று கல்லூரி வளாகத்தில் கோஷமிட்டு கொண்டு இருந்தார்கள். அது மட்டும் ஆறுதலாக இருந்தது .


என் அம்மா அப்பா முகம் வந்து போனது. நீ தினமும் பத்தி கொளுத்துவியா என்று ஒருவர் கேட்டார். ஆம் என்று கூறினேன். அவ்வளவு தான். இவன் தான். இவன் தான் என்று ஆங்கிலத்தில் எதோ எதோ பேசிக் கொண்டே இருந்தார்கள். எவனோ ஒருவன் டைம் செட் பத்தியை வெடிகுண்டுல வைத்து வெடித்து இருக்கான் போல. கடைசியாக பத்தி பயன் படுத்திய நான் மாட்டிக் கொண்டேன்.


என் நல்ல நேரம் முதல்வர் என் மேல் வைத்த நம்பிக்கை நான் தினமும் ஆலயம் சென்றது ஆலயபணிகள் செய்து வந்த நல்ல காரியங்கள் அனைத்தும் எனக்கு நல்லது செய்தது முதல்வர் ரூபத்தில். எப்படியோ நான் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஆலயம் சென்று கடவுளை நோக்கி இருகரம் கூப்பி வணங்கி விட்டு விடுதி வந்து சேர்ந்தேன். 


நாள் முழுவதும் எனை நலம் விசாரிக்க நண்பர்கள் அனைவரும் வந்தனர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று சொல்லி கொண்டே இருந்தேன். அதை வைத்துது யார் என்று எல்லாரும் ரகசியமாக ரொம்ப நாள் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கல்லூரி முடித்த பிறகு தான் தெரிந்தது எல்லாம் நம்ம ஆட்கள் தான் என்று. பிறகு எப்படி இதை யாரிடம் போய் சொல்ல என்று. நண்பர்கள் எப்போதும் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்!


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)