மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

Su.tha Arivalagan
Oct 25, 2025,11:00 AM IST

- கி. அனுராதா


இறைவன் ஒரு நாள் பக்தர்களைக் காண விரும்பி இருவரைத் தேர்ந்து எடுத்தார். அவர்களிடம் ஆளுக்கு ஒரு விதை கொடுத்துப் பயன் பெறுங்கள் என்று கூறி விடைப் பெற்றார். முதலாமவன் விதையை பூஜை அறையில் வைத்து பூஜித்து நித்யம் ஒரு பூசைப் போட்டுக் கொண்டே இருந்தான். 


இவன் ஒரு புறமிருக்க மற்றொருவன் இறைவன் பயன் பெறுங்கள் என்றாரே என்று வெகு நேரம் சிந்தித்தான். முடிவில் விதையை தன் தோட்டத்தில் நட்டான். மிகுந்த பக்தி மற்றும் ஆர்வம், ஈடுபாட்டுடன் கவனித்து வளர்த்தான். விதை வளர வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கையும் வைத்தான். முறையாக தண்ணீர், இயற்கை உரம் மற்றும் அதற்கு தேவையான அனைத்தும் செய்தான்.


ஆண்டுகள் பல உருண்டோடின. இருவருக்கும் வயது முதிர்ந்து இருந்தது. முதலாமவன் கடவுளை நிந்தித்துக் கொண்டு இருந்தான். உன்னை , நீ கொடுத்ததை தினமும் பூஜை செய்து நான் கண்ட பயன் தான் என்ன? விரக்தி அடைந்து விட்டது என்று புலம்பினான். என் குடும்பம் நடத்தக் கூட என்னால் முயலவில்லை. எல்லாம் உன்னால் தான் என்று நிந்தித்தான்.   




பிறகு இன்னொருவனை நினைத்தான். ஆம்., அவனை மறந்து விட்டேனே அவனும் என்னைப் போல் மிகுந்த வருத்தத்துடன்  இருப்பான். ஆதரவு மற்றும் உதவி கிடைத்தாலும் அல்லது நாம் கொடுத்தாலும் நன்றாக இருக்கும் என்று தேடிச் சென்றான்.


இரண்டு ஊர் தள்ளி இருந்தது அவனது வீடு. செல்லும் வழி தோறும் மாமரத் தோப்புகள் நிரம்பி வழிந்தது.  பசிக்கு இரண்டு பழங்கள் உண்டபின் நடந்தான். கிராமவாசிகள் அனைவரும் பழத்தினைப் பறித்து புசித்தனர்.  இறுதியாக அவனது வீட்டை அடைந்தான். பெரிய வீடு, அவன் மனைவி வரவேற்றாள். ம்ம்ம் அவள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்டு பெருமூச்சு விட்டபடி,  என்னப்பா எப்படி இருக்கிறாய் என்றான்.


அவனோ தெய்வத்தின் அருளால் மிக மிக சுகமாக இருக்கிறோம்.  இவனுக்கு எரிச்சல் வந்தது. அதைப் பற்றி மட்டும் பேசாதே. ஒன்றுக்கும் உதவாத விதையைக் கொடுத்து ஏமாற்றி என் வாழ்க்கையே வீணாய் போனது என்றான். அவனோ சிரித்தான். அட பாவி ஒரு வரமாக கடவுள் கொடுக்கத் தான் செய்வார். அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு தானே நமக்கு திறமை , அறிவை அளித்தார். 


என்னைப் பார். ஒரு விதை இன்று பல மாமரத் தோப்புக்கு சொந்தமானது.  அப்பழங்களை விற்று தான் இன்று என் குடும்பத்துடன் மிகச் சிறப்பாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். மேலும் வழிப் போக்கர்கள் பசிக்காகவும் இரண்டு கிராமம் முழுவதும் இரு வழியிலும் நட்டு வைத்து பராமரித்தேன். இன்று நீயும் உண்டாயா என்று கேட்டதற்கு ஆம் என்று சிரம் தாழ்த்தி கண்ணீர் சிந்தினான். 


தெய்வம் தந்த வாழ்க்கையை வீணடித்து விட்டேனே! உழைக்காமல் எவ்வாறு பயன் பெற முடியும் என்று சிந்திக்க மறந்து விட்டு தெய்வத்தை நிந்தித்தேனே! கடவுளே என்னை மன்னியுங்கள். "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்" என்ற பழமொழியை தவறாக புரிந்து கொண்டேனே! என்று அழுதான். அழுதவனை தூக்கி நிறுத்தி என் இரண்டு தோப்புகளை நீயே வைத்துக் கொண்டு உன் குடும்பத்தினை சிறப்பாக நடத்து என்றான் இன்னொருவன். கண்ணீர் புன் சிரிப்புடன் நன்றிக் கலந்த சந்தோஷத்துடன் முடிந்தது


(கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)