"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)

Su.tha Arivalagan
Oct 23, 2026,04:30 PM IST

- கே. பிரியங்கா


பிரியா பள்ளி வாசலில் நின்றுகொண்டு காவலாளியையே பார்த்தாள்.


“சார், நான் இந்தப் பள்ளியில்தான் படித்தேன். சாரதா என்னோட வகுப்பில் படித்தவள். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். அவள் இந்தப் பள்ளியில் படிக்கவே இல்லைன்னு எப்படி சொல்றீங்க?”


காவலாளி அவளுடைய முகத்தைப் பார்த்தார்.


அம்மா, நான் இந்தப் பள்ளியில் இருபது வருஷமா வேலை பார்க்கிறேன். உங்களுக்கு வேண்டும்னா பழைய ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்க.


பிரியா உடனே தன்னுடைய பழைய வகுப்பு ஆசிரியரான கிருஷ்ணாவதி அம்மாவைத் தேடிச் சென்றாள். அவர் இப்போது ஓய்வு பெற்றிருந்தார். பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். பிரியாவைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார்.


என்னம்மா பிரியா! இவ்வளவு வருஷம் கழிச்சு வந்திருக்க? எப்படி இருக்க?


பிரியா அவரிடம் சாரதாவைப் பற்றிக் கேட்டாள். அந்தப் பெயரைக் கேட்டதும் கிருஷ்ணாவதி அம்மாவின் முகம் மாறியது.


எந்த சாரதா?




என்ன மேடம், என் கூட கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பாளே! நான் அவளுக்கு டிபன் கொடுப்பேன். அவளுக்கு யாரும் நண்பர்கள் கிடையாது.


கிருஷ்ணாவதி அம்மா நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். பிறகு வீட்டுக்குள் சென்று ஒரு பழைய இரும்புப் பெட்டியை எடுத்து வந்தார்.


அதற்குள் பழைய வகுப்புப் புகைப்படங்கள், தேர்வு விடைத்தாள்கள், சில கடிதங்கள் இருந்தன. ஒரு புகைப்படத்தை பிரியாவிடம் கொடுத்தார். அது அவளுடைய பத்தாம் வகுப்பு புகைப்படம். அதில் பிரியா இருந்தாள். அவளுடைய நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் கடைசி பெஞ்சில் சாரதா இல்லை!


மேடம்! இது எப்படி? எனக்கு அவளோட முகம் தெளிவா நினைவிருக்கே?


கிருஷ்ணாவதி அம்மாவின் கண்களில் கண்ணீர் வந்தது.


"பிரியா, சில நினைவுகளை நாம் மறக்க முயற்சி செய்வோம். சில நினைவுகளை நம்மால் மறக்கவே முடியாது. உனக்கு அந்தப் பெண்ணைப் பற்றிய நினைவுகள் இருக்குன்னா, அதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்"


அவர் ஒரு பழைய டைரியை பிரியாவிடம் கொடுத்தார். இது நான் ஆசிரியையாக இருந்த காலத்தில் எழுதிய டைரி. இதைப் படிச்சுப் பாரு.


பிரியா டைரியைத் திறந்தாள்.


ஒரு பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:


"இன்று பள்ளிக்கு ஒரு புதிய மாணவி வந்தாள். அவள் பெயர் சாரதா. மற்ற மாணவர்களுடன் அவளைச் சேர்த்துப் பழகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவள் யாரிடமும் பேசுவதில்லை. அவள் கண்களில் ஏதோ ஒரு பெரிய கவலை இருக்கிறது."


பிரியா அதிர்ச்சியடைந்தாள்.


“மேடம்! அப்படின்னா சாரதா உண்மையிலேயே இந்தப் பள்ளிக்கு வந்திருக்காளே!


கிருஷ்ணாவதி அம்மா தலையசைத்தார்.


ஆமாம். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அவள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டாள். அவளுடைய குடும்பத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். முடியவில்லை.


ஏன் மேடம்?


அதைப் பற்றிய முழு உண்மை எனக்குத் தெரியாது.


டைரியின் கடைசிப் பக்கத்தை பிரியா திருப்பினாள். அதில் ஒரு வரி மட்டும் எழுதப்பட்டிருந்தது.


சாரதாவைக் காப்பாற்ற ஒரே ஒரு மாணவியால் மட்டும்தான் முடியும். அந்த மாணவி பிரியா


அதற்குக் கீழே ஒரு முகவரி இருந்தது. பிரியா அந்த முகவரியைப் பார்த்தாள். அது சென்னையில் இருந்த ஒரு பழைய ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் முகவரி.


அவள் கிருஷ்ணாவதி அம்மாவிடம் விடைபெற்றுவிட்டு அங்கே சென்றாள். அந்த இல்லத்தின் பொறுப்பாளர் பழைய பதிவுகளை எடுத்துப் பார்த்தார்.


சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கோப்பை பிரியாவிடம் கொடுத்தார். அதில் சாரதாவின் புகைப்படம் இருந்தது. அதற்குக் கீழே இப்படி எழுதப்பட்டிருந்தது:


"சாரதா — இந்த இல்லத்திலிருந்து 15 வயதில் வெளியேறியவர். அவளைப் பற்றிய தகவல் தேவைப்பட்டால், அவள் விட்டுச் சென்ற கடிதத்தைப் படிக்கவும்."


பிரியா அந்தக் கடிதத்தைத் திறந்தாள்.


"என்னைத் தேடி யாராவது ஒருநாள் வந்தால், அவர்களிடம் ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள். நான் பசியாக இருந்தபோது எனக்குச் சாப்பாடு கொடுத்த அந்தப் பெண் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறாளா?_


கடிதத்தின் கீழே சாரதாவின் கையெழுத்து இருந்தது. பிரியா கண்ணீரைத் துடைத்தாள்.


சாரதா... உன்னை நான் மறக்கவே இல்லை


அந்த நேரத்தில் இல்லத்தின் பொறுப்பாளர் ஒரு தகவலைச் சொன்னார்.


அம்மா, இந்தக் கடிதத்தை இங்கே கொடுத்துவிட்டுச் சென்ற பெண், உங்களை நேரில் சந்திக்க விரும்பவில்லை. ஆனால் அவள் ஒவ்வொரு வருடமும் இதே நாளில் இங்கே வருவாள்.


பிரியா காலண்ட்ரை பார்த்தாள். அன்று அதே நாள். அப்படியென்றால் சாரதா அருகில்தான் இருக்கிறாளா?


(தொடரும்)


(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)