கடைசி பெஞ்சில் இருந்த பெண்.. ஒரு திடீர் தொடர்!

Oct 20, 2026,01:02 PM IST

- கவிஞர் கே. பிரியங்கா


சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள் பிரியா,வயது 29. அவளுடைய வாழ்க்கை மற்றவர்களைப் போலத்தான் இருந்தது. காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்குத் திரும்புவது, குடும்பத்திற்காக உழைப்பது என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் அவளுடைய மனதில் ஒரு ஆசை இருந்தது.


சிறுவயதில் தன்னுடைய பள்ளியில் படித்த ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்தப் பெண்ணின் பெயர் சாரதா. பள்ளியில் சாரதா யாரிடமும் அதிகமாகப் பேசமாட்டாள். எப்போதும் கடைசி பெஞ்சில் தனியாக உட்கார்ந்திருப்பாள். அவளிடம் நல்ல உடைகள் இருக்காது. மதிய உணவுக்குக் கூட சில நாட்கள் எதுவும் கொண்டு வரமாட்டாள். 


வகுப்பில் சில மாணவிகள் அவளைக் கேலி செய்வார்கள். ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் பதில் தெரிந்திருந்தாலும் பயத்தில் பேசமாட்டாள். ஒருநாள் மதிய உணவு நேரத்தில், பிரியா தன்னுடைய டிபன் பாக்ஸைத் திறந்தாள்.

அப்போது கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த சாரதா தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அமைதியாக இருந்ததைப் பார்த்தாள். பிரியா அவளிடம் சென்றாள். 




“சாரதா , நீ சாப்பிடலையா?” 


“இல்லை.”


“ஏன் டிபன் கொண்டு வரல?”


சாரதா சிரிப்பதுபோல் முயற்சி செய்தாள்.


“பசிக்கலை.


ஆனால் அவளுடைய கண்களில் கண்ணீர் இருந்தது. பிரியா எதுவும் கேட்கவில்லை. தன்னுடைய டிபன் பாக்ஸை அவளிடம் கொடுத்தாள். “நீ சாப்பிடு. எனக்குப் பசிக்கலை.” அன்றிலிருந்து இருவரும் நண்பர்களானார்கள். 


சில மாதங்கள் கழித்து பள்ளி இறுதித் தேர்வு வந்தது. தேர்வு முடிந்ததும் பிரியாவின் குடும்பம் வேறு ஊருக்குச் சென்றுவிட்டது. சாரதாவை மறுபடியும் சந்திக்கவே முடியவில்லை. பல வருடங்கள் கழிந்தன. பிரியா அந்த நினைவையே மறந்துவிட்டாள்.


ஒருநாள் அவளுடைய வீட்டிற்கு ஒரு பார்சல் வந்தது. அனுப்பியவர் பெயர் இல்லை. அதற்குள் ஒரு பழைய பள்ளி அடையாள அட்டை இருந்தது. அதில் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் பிரியா அதிர்ச்சியடைந்தாள். அது சாரதாவின் அடையாள அட்டை. அதனுடன் ஒரு சிறிய கடிதமும் இருந்தது.


“பிரியா, அன்று நீ எனக்குக் கொடுத்த ஒரு டிபன் பாக்ஸால் என் வாழ்க்கையே மாறியது. உன்னை ஒருமுறை சந்திக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பு நீ ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.”_


கடிதத்தின் கடைசி வரி அவளுடைய இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்தது.


“உன்னுடைய வாழ்க்கையில் நீ நினைப்பதைவிடப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அந்த ஒரு நாள் மட்டுமல்ல.”


கீழே ஒரு முகவரி எழுதப்பட்டிருந்தது. அது பிரியா படித்த அதே பள்ளியின் முகவரி. அடுத்த நாள் காலை அவள் அந்தப் பள்ளிக்குச் சென்றாள். வாசலில் இருந்த காவலாளியிடம் சாரதாவைப் பற்றிக் கேட்டாள். அவர் அவளைச் சில நொடிகள் பார்த்துவிட்டு சொன்னார்:


“அம்மா, அந்தப் பெயரை இங்கே யாரும் பல வருடங்களாகச் சொல்லவில்லை.”


“ஏன் சார்?”


அவர் மெதுவாகப் பதிலளித்தார்:


“ஏனென்றால், சாரதா இந்தப் பள்ளியில் படித்ததே இல்லை என்று பள்ளிப் பதிவில் இருக்கிறது!”


பிரியா அதிர்ச்சியில் நின்றாள்.


அவளிடம் சாரதாவுடன் எடுத்த புகைப்படங்கள் இருந்தன. பள்ளி நாட்களின் நினைவுகள் இருந்தன.


அப்படியென்றால் அந்தப் பெண் யார்? அவளுடைய அடையாள அட்டை மட்டும் எப்படி பிரியாவிற்கு  வந்தது? அந்தக் கடிதத்தை அனுப்பியது யார்?


(தொடரும்)


(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்