Kalaiarasi Poem: ஆசை !

Su.tha Arivalagan
Apr 15, 2026,04:59 PM IST

- கவி.கலை


அரவணைப்பு வார்த்தையில் மட்டுமல்லாமல் 

அரவணைக்கும் கரமாகிட ஆசை! 

ஆதரவு வெறும் சொல்லில் மட்டுமல்லாமல் 

செயலில் வெளிப்பட ஆசை! 

இன்பம் முகத்தில் மட்டும் மலராமல்  

இகமெல்லாம் மலர்ந்திட ஆசை !  

ஈரம் நிலத்தில் மட்டும் எதிர்பாராமல்  

மனதிலும் நிறைந்திட ஆசை? 

உறவுகளைத் தினம் ஏங்கித் தேடாமல் 

உண்மை உறவாகிட ஆசை !            

ஊமையாக இருந்து விடாமல்  

உறுதியாக உரைத்திட ஆசை !  

எண்ணிய தெல்லாம் எனதாக இல்லாமல்  

எளியவருக்காய் வழங்கிட ஆசை! 

ஏமாற்றம் பல நான் கண்டாலும்                     

ஏற்றம் காணும் மனம் பெற ஆசை!  

ஐயம் இருந்தாலும் அகமெல்லாம்  

உயர்வான எண்ணம் நிலைபெற ஆசை ! 

ஒடுக்கும் கைகள் ஒதுக்கினாலும் 

ஓரம் ஒதுங்கிய ஓடமாகாமல்  

ஓங்கிய கைகளாய் நீதி நிலைநாட்டிட ஆசை!




ம(று)றத்தல் 



இரவுகளில் உறவுகளை           

எண்ணி எண்ணி 

இமைக்கும் விண்மீன்களை  

எண்ண மறந்தோம்.   

மனத்துளிகளில் 

கசிந்து கசிந்து  

மழைத்துளிகளில்  

நனைய மறந்தோம்...  

மதிகெட்ட மானுடவாசம்  

நுகர்ந்து நுகர்ந்து  

மண்வாசனை மறந்தோம்.  

சுவர்களைக் கட்டி  

எழுப்பி எழுப்பி  

சுவடுகள் மறந்தோம்... 

தராசில் எடைப்  

போட்டு போட்டு  

நீதியை மறந்தோம்.  

இன்னும் மறக்க நினைக்கிறோமா? 

இல்லை மறுக்க நினைக்கிறோமா ?


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)