மௌனத்தின் எல்லை? (சுவர்)
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
கல்லும் மண்ணும் கலந்த
உயிரற்ற ஜடம் அல்ல நீ!
இல்லம் சிந்தும் சிரிப்பு ,கண்ணீர் ,
இரண்டையும் விழுங்கும் சாட்சி நீ!
வெயில் ,மழை ,தடுத்து மனிதம் காக்கும் நிழல் தரும் தியாகி நீ!
அம்மாவின் கை மஞ்சள்
உன் மார்பில் வரலாறு சொல்லும்!
பிள்ளைகள் வரைந்த கிறுக்கல்கள்
அழகிய ஓவியமாய் அங்கே மின்னும்!
வர்ணங்கள் மங்கிப் போனாலும்
மாறாமல் என்றும் நிற்பாய் நீ!
ரகசியங்கள் காக்கும் உனக்கு
உண்மையில் பெரிய இதயம் உண்டு!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)