மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!

Su.tha Arivalagan
Aug 03, 2026,05:15 PM IST

- கலைவாணி கோபால்


"ஈண்டு வரும் வினைகளுக்கு இறைவன் உளான்" எனச் சொல்லியபடி மன்னர் படைகளிடம் தன்னை ஒப்படைத்த திருநாவுக்கரசரின் வயது அப்போது 65. அவரை , வாள் முனையில் சங்கிலி போட்டு இழுத்து சென்றனர். திருநாவுக்கரசரை, காஞ்சி மன்னன் விசாரித்தான். திருநாவுக்கரசர் தனக்கு நடந்த அதிசயத்தை சொன்ன போதிலும், மன்னனின் அறிவானது, சமணரால் சலவை செய்யப்பட்டு இருந்தது. அதனால், நாவுக்கரசர் சொன்னதை ஏற்க மறுத்தது.


சமணரால், அறிவு சலவை செய்யப்பட்ட மன்னன், அவரை நம்பாமல் ,'சங்கரன் உண்டு என்பவனை சங்கு வேகும் சூளையில் இடுவோம், சைவ வாசல் சென்றவனை சுண்ணாம்பு காள வாசலில் இடுவோம்' என மன்னனுக்கு சமணர்கள் ஆலோசனை வழங்கினார்கள். 


மன்னனும் அந்த ஆலோசனைக்கு தலையசைத்தான். அந்த சுண்ணாம்பு சூலை யானது சிப்பி வேகவைத்து சுண்ணாம்பு எடுக்கும் உலைகள் (தெளிவாகச் சொன்னால், இவையெல்லாம் செங்கல் சூலை போல... மகா வெப்பமான இடங்கள், அதனுள் எலும்பு போட்டாலும் பஸ்பம் ஆகிவிடும்) அதில், திருநாவுக்கரசரை அடைக்கும்படி .....மன்னன் உத்தரவிட்டான். அந்த வெப்பம் உடலின் ஊனை உருக்கி நீராக்கி எரித்து எலும்பையும், பொடியாக்கும் வல்லமை கொண்டது. 


ஏழு நாட்கள் கழித்து திருநாவுக்கரசரின் எலும்புக்கூட சாம்பலோடு கலந்திருக்கும். என நினைத்து, மெல்ல திறந்து பார்த்தப் பொழுது ,..அவர்கள் பெரும் அதிர்ச்சக்குள்ளாயினர்.


அவர் ,அங்கு (மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்) என்ற பதிகம் பாடி குளக்கரையில் குளிர் நிழலில் உள்ளதைப் போல மிகவும் தேஜஸ் உடன் சிறு வியர்வையும் இன்றி அமர்ந்திருந்தார்.




நிலவறைக்கு கதவுகள் இல்லை .ஒரு சுவர் போல் கட்டி விடுவார்கள், அந்த.... வெப்பத்தில் இவர் பிழைத்தது ஆச்சரியம்!அதைவிட, ஏழு நாட்கள் உணவு இன்றி, ஒரு சொட்டு நீரின்றி ,நெருப்பின் அருகே இருந்தது பேராச்சரியம், அதில் ,இவர் சுவாசித்துக் கூட இருக்க முடியாது... எப்படி உயிருடன் இருக்கின்றார்? என்பதை நினைத்து அனைவரும் தலைசுற்றி நின்றனர்.


பதிகம் பாடிக்கொண்டே காளவாசலில் இருந்து இவர், வெளியே வருவதை கண்ட சமணர்கள் ....சமண சமயத்தில் பயின்ற வித்தையால் தான் இது நடந்தது என்று கூறினர். எல்லாக் கலைகளையும் பெற்ற சமண முனிக்கு. இதெல்லாம், சாதாரணம் எனச் சொல்லி ....மன்னன் மறுபடியும், இன்னொரு தண்டனையை விதித்தான். யானை காலால் அவர் தலையினை இடறச் செய்யும் கொடிய தண்டனை அது.


தலை மட்டும் வெளியில் தெரியுமாறு மண்ணில் புதைக்கப்பட்ட திருநாவுக்கரசர் .யானை வந்து அவர் ,தலையினை மிதிக்க வேண்டும். அப்படியே ,அவரை மூட வேண்டும் அதுதான் தண்டனை. அவ்வளவுதான்,யானை தயாராக நின்றது. பாகனும்  ,யானைக்கு திருநாவுக்கரசரின் தலையை மிதிக்குமாறு கட்டளையிட்டான்.


 யானை , திருநாவுக்கரசரை நெருங்கியதும் , சமண கூட்டம் யானை .அவரை கொன்றுவிடும். என்ற நினைப்பில் சிரித்தபடி காத்திருந்தனர். ஆனால் அங்கு நடந்ததோ வேறு.!


யானை வருவதை உற்று நோக்கியபடி, நாவுக்கரசர் பதிகம் பாடினார் "சுண்ண- வெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும், எனத் தொடங்கும் பதிகம் பாடிக் கொண்டிருந்தபோதே யானை அவரை நெருங்கிற்று ...ஆனால், மும்முறை வலம் வந்து மண்டியிட்டு , வணங்கியது .அது, மண்டியிடும் போது பாகன் மேலிருந்து கீழே விழுந்தான் .யானை அவனை கொன்று விட்டு ஓடிப் போனது. பட்டத்து யானை அவரை வணங்கி விட்டு சென்றதை கண்ட மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அங்கு நடந்ததை ஏற்றுக் கொள்ள சமணர்களால் முடியவில்லை. ஆனால் ,சமண கூட்டம் திரும்பவும்  நாவுக்கரசரை கொல்ல திட்டம் தீட்டி நின்றனர்.


சமணர்கள் திரும்பவும் மன்னனின் அறிவை சலவை செய்தனர். இவையெல்லாம், சமணர்கள் இடத்தில் கற்றுக் கொண்ட தந்திரங்கள் என்று மன்னனை குழப்பி நாவுக்கரசருக்கு கொடிய விஷம் கொடுக்க ஆலோசனை கொடுத்தனர். மன்னனும் அதை ஏற்று செயல்படுத்த தொடங்கினான். எதிரிகள் மேல் செலுத்தும் அம்பின் நுனியில் வைக்கப்படும் கொடும் விஷத்தை பால் அடிசில் (பால் சாதம்) கலந்து கொடுத்ததனர். எப்படி பாற்கடலை கடைந்த போது ,சிவன் உண்ட நஞ்சை விட ,இது பெரியது இல்லை. என, நினைத்த நாவுக்கரசர் அந்த பால் சாதத்தை வாங்கி குடித்தார்.


நொடியில் கொல்ல வேண்டிய விஷம் ...ஒன்றும் செய்யவில்லை. மன்னன் குழம்பினான் .இனி சைவத்தை நம்புவது வழி, என்ற நேரத்தில், மன்னன் அறிவு ஓட்டத்தை கண்டு.... சமணர்கள் மறுபடியும் , மன்னரை குழப்பி இதுவும் சமணமத தந்திரங்கள் என சொல்லி அடுத்து தண்டனைக்கு மன்னனை தயார் படுத்தினர்.


(தொடரும்)