கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்.. உலகிலேயே மிக உயரமான.. 81 அடி உயர முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

Su.tha Arivalagan
Nov 20, 2025,01:55 PM IST

- சுமதி சிவக்குமார்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சங்கராபுரம் அடுத்த  எஸ். குளத்தூரில் எழுந்தருளி உள்ள உலகிலேயே மிக உயரமான 81 அடி மகா விஸ்வரூப ஆறுமுகப் பெருமான் சிலை மகா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.


தமிழ்நாட்டில் கோவில்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆதி காலத்துக் கோவில்கள் தவிர தற்போது புதிது புதிதாக வித்தியாசமான முறையிலும் கோவில்கள் உருவாகி வருகின்றன. மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவில் பாணியில் சேலம் மாவட்டத்தில் முத்துமலை கோவில் ஏற்கனவே பிரபலமாகியுள்ளது.


இந்த வரிசையில் தற்போது சங்கராபுரம் அருகே எஸ் குளத்தூரில் விஸ்வரூப ஆறுமுகப் பெருமான் கோவில் உருவாகியுள்ளது. இந்தக் கோவிலில் முருகப் பெருமான் ஆறு முகத்துடன், சூரசம்ஹாரத்தின்போது காட்சி தரும் விஸ்வரூப கோலத்துடன் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த சிலை 81 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்குத்தான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.




சுமார் அரை ஏக்கர்  பரப்பளவில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு மேல் பீடம் அமைத்து சிலையை நிறுவியுள்ளனர். முருகன் சிலைக்கு ஆறு தலைகள், 12 கைகள் உள்ளன. அருகில் மயிலும் உள்ளது. முருகனின் ஒவ்வொரு கையிலும் வேல், சூலம், கத்தி, சங்கு, சக்கரம், உடுக்கை, நாகம் என ஆயுதங்கள் உள்ளன. உள்ளங்கைகளில் ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டு அதில் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தக் கோவிலுக்கு வந்தால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற பலன் கிடைக்குமாம்.


(சுமதி சிவக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)