விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்

Su.tha Arivalagan
Jun 03, 2026,10:07 AM IST

- அ.சீ.லாவண்யா


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளையொட்டி, பிரம்மாண்டமான திருத்தேர் உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.


வானில் இருந்து கழுகுப் பார்வையில் பக்தர்களின் மனதில் மெய் சிலிர்த்த வண்ணம் பதிவான காட்சிகள், திருவிழாவின் பிரம்மாண்டத்தையும் பக்தர்களின் உற்சாகத்தையும் கண்முன் நிறுத்தின.


அதிகாலை முதலே காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் பக்தர்களால் நிரம்பின. வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள, “கோவிந்தா… கோவிந்தா…” என்ற நாமம் சேர்ந்த பக்தி முழக்கங்கள் நகரமெங்கும் எதிரொலித்தன. குடும்பம் குடும்பமாக பக்தர்கள் திரண்டு ஆரத்தி எடுத்து  வழிபாட்டில் ஈடுபட்டனர்.


வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருத்தேர் உற்சவத்தில், பக்தர்கள் ஆர்வமுடன் தேர்  இழுத்தனர். இந்த தருணம், பக்தர்களுக்கு ஆன்மிக மகிழ்ச்சியையும், புண்ணிய அனுபவத்தையும் அளித்ததாக மட்டும் இல்லாமல் பகவான் பெருமாள் அருளையும் பக்தர்கள் பெற்றனர்.




மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேர் நகரும் தோற்றம், அதைச் சுற்றிய பக்தர்களின் பெருங்கூட்டம், வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட வீதிகள் ஆகியவை கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.


திருத்தேர் நகரும் வழித்தடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.


வானில் இருந்து பார்த்தபோது பக்தி கடலாய் தெரிந்த காஞ்சிபுரம், தரையில் நின்றவர்களின் இதயத்தில் தெய்வீக நம்பிக்கையை விதைத்தது; தேர் நகர்ந்தாலும், அந்த பக்தி உணர்வு இன்னும் நகரம் முழுவதும் நிலைத்திருக்கிறது.