கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

Su.tha Arivalagan
Jan 30, 2026,06:23 PM IST

சென்னை : திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளதாக அக்கட்சியின் எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். இதனால் யார் அந்த புதிய கட்சிகள்? என்ற எதிர்பார்ப்பு ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.


திமுக கூட்டணி குறித்தும், திமுக.,விற்கும் காங்கிரசிற்கும் மோதல் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் குறித்து திமுக எம்.பி., கனிமொழியிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், காங்கிரசுடன் பல காலமாக கூட்டணியில் இருக்கிறோம். அவர்களுடன் எந்த மோதலும் இல்லை. நிலையை சுமூகமாக உள்ளது. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன என கூறினார். தமிழகத்தில் ஒரு சில கட்சிகள் தவிர ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்து, தேர்தல் வேலைகளை கவனிக்க துவங்கி விட்டார்கள். அப்படி இருக்கையில் கனிமொழி சொல்லும் அந்த புதிய கட்சிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


யார் அந்த புதிய கட்சிகள்?



தற்போதைய சூழலில் கூட்டணியை முடிவு செய்யாமல் இருப்பது தேமுதிக.,வும் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக.,வும் தான். இவர்கள் தவிர ஓபிஎஸ், புதிய தமிழகம் போன்றவர்களும் எந்த பக்கம் செல்வது என முடிவை அறிவிக்காமல் இருக்கிறார்கள். இவர்களில் ஓபிஎஸ், மீண்டும் அதிமுக அல்லது என்டிஏ கூட்டணியில் சேரும் முயற்சியில் இறங்கி உள்ளார் என்பதை நேற்றைய அவரது பேச்சு வெளிப்படையாக காட்டி விட்டது. ஓபிஎஸ்.,க்கு அதிமுக.,வில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லியும் கூட, அது பழைய செய்து என பதிலளித்து வருகிறார் ஓபிஎஸ். அதனால் அவர் திமுக பக்கம் செல்ல மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.


ராமதாஸ் திமுக.,விற்கு செல்வாரா?


பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்வார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திருவாவளவன் ஒப்புக் கொண்டால் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறோம் என திமுக தலைமை சொல்லி விட்டதாக தகவல் பரவியது. இதற்கிடையில் திருமாவளவன் தான் பெறாத மகன் என ராமதாஸ் கூறி இருந்தார். இது திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் சேர ராமதாஸ் தயாராகி விட்டார் என்பதையே காட்டியது. ஆனால் இன்று திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், நானும் ராமதாசும் தமிழ் மொழிக்காக இயக்கம் நடத்தினோம். அரசியல் காரணங்களுக்காக நாங்கள் பிரிந்த போது வல்லமையான அவர் பின்னால் தான் அனைவரும் சென்றார்கள். எனக்கு ஆறுதலாக கூட யாரும் இல்லை. இந்த சமூகம் அவ்வளவு எளிதில் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. முட்டி மோதி தான் திருமாவளவன் தலைவனாக வளர்ந்துள்ளேன் என்றார். இது திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது இருக்கும் கோபத்தையே காட்டுகிறது. அப்படி இருக்கும் போது திமுக கூட்டணியில் ராமதாஸ் சேர திருமாவளவன் ஒப்புக் கொள்வதற்கு வாய்ப்பு குறைவு.


தேமுதிக.,வின் நிலை :


அடுத்து இருப்பது தேமுதிக தான். பிப்ரவரி 3ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்க போவதாக நேற்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், இன்று தாங்கள் யாருடனும் கூட்டணி பேசவில்லை. அனைத்து தகவல்களும் பொய்யானவை. யாருடனும் பேரம் பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை. ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை அறிக்காத போது, தாங்கள் மட்டும் எதற்காக கூட்டணியை அறிவிக்க வேண்டும் என கூறி உள்ளார். இதனால் திமுக, அதிமுக இரண்டுமே தேமுதிக.,வை கழற்றி விடும் முடிவுக்கு வந்து விட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம், விரக்தியால் தான் பிரேமலதா இப்படி சொல்கிறார் என கணிக்க முடிகிறது. தேமுதிக வைக்கும் டிமாண்டை ஏற்க திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தயாராக இல்லை என்றே சொல்லப்படுகிறது.


ஒருவேளை இவரா?


மீதம் இருப்பது புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தான். தாங்கள் இருக்கும் கூட்டணி மட்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என 10 நாட்களுக்கு முன் பேட்டி அளித்த பிறகு அவரை பற்றி பெரிதாக எந்த தகவலும் இல்லை. இத்தகைய சூழலில் புதிய கட்சிகள் வர உள்ளதாக யாரை கனிமொழி குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. ஒருவேளை தவெக.,வை சொல்கிறாரோ என்று தவெக வட்டாரத்தில் விசாரித்தால் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிக்கும் வேலையை விஜய் துவக்கி விட்டதாக சொல்கிறார்கள். இதனால் கனிமொழி சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம் என புரியாமல் அரசியல் வட்டாரத்தில் பலரும் குழம்பி போய் உள்ளார்கள்.