என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)

Su.tha Arivalagan
Sep 15, 2025,10:36 AM IST

- சுதா அறிவழகன்

நாம் எப்போது சந்தித்தோம்?
என் நினைவில்,
ஒரு காதல் அலை.

நீயும் நானும்,
இரு வேறு திசைகள்,
எப்படி ஒன்று சேர்ந்தோம்?

அது ஒரு சாதாரண நாள்
சூரியன் வழக்கம்போல் தன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தான்.
சாலைகள் வாகனங்களின் இரைச்சலில் நிரம்பியிருந்தன,
நான் என் எண்ணங்களில் மூழ்கி நடந்துகொண்டிருந்தேன்.
என் மனம் ஒரு வெற்றிடம் போல,
எந்த இலக்கும் இன்றி அலைந்து திரிந்தது.

அப்போதுதான் நீ என் முன் தோன்றினாய்,
ஒரு புயல் அமைதியைத் தொட்டதைப்போல.
உலகம் ஒரு நொடியில் உறைந்துபோனது,
என் காதுகளில் வாகன இரைச்சல் மறைய,
பறவைகளின் இன்னிசை மட்டும் கேட்டது.
உன் கண்கள்... 
அவை இருட்டில் ஒளிரும் விண்மீன்களைப் போல,
என் இதயத்தின் அடியாழம் வரை நுழைந்தன
உன் கண்கள் 
என் கவிதையின் முதல் வரியாகின.



உன் இதழ்களில் தோன்றிய அந்த சிறு புன்னகை,
வறண்டுபோன நிலத்தில் விழுந்த முதல் மழைத்துளி போல 
என் ஆத்மாவின் தாகத்தைத் தணித்தது,
ஒரு கணம், என் வாழ்வின் எல்லாத் தேடல்களும் முடிவுக்கு வந்ததாக உணர்ந்தேன்.

வானவில் வண்ணங்கள் என் கண்களுக்குள் நுழைந்தன,
காதலின் புல்வெளியில் என் மனம் அலைபாய்ந்தது.
இதயத்தில் ஒரு சிறு பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்தது,
வெண்ணிலவு பூமிக்கு வந்ததைப்போல.
என் கனவுகளின் கதவுகள் திறந்தன,
நான் தேடிய தேவதை நீயே என்று என் மனம் சொன்னது.
நான் பார்த்த முதல் விண்மீன் நீ,
என் வாழ்வில் வந்த முதல் வசந்தம் நீ.
உன் புன்னகை என் நொடிகளை ஒளியாக்கியது,
உன்னை பார்த்த முதல் நொடியே 
என் உலகம் முழுமையடைந்தது
உன் கண்கள் என் கண்களை,
கவ்விக் களித்த அந்த தருணம்
என்னில் பெருக்கெடுத்தது ஒரு கவிப் புயல்

நான் யார் என்று உனக்குத் தெரியாது,
நீ யார் என்று எனக்கும் தெரியாது.
ஆனால், இதயம் தெளிவாகச் சொன்னது,
'நீயே என் கவிதையின் முதல் வரியும்,
என் வாழ்க்கையின் கடைசிப் பக்கமும்.'
என் கவிதைகள் உனக்காக எழுதப்பட்டன,
என் பாடல்கள் உன்னைக் குறித்தே பாடப்பட்டன.

போகிற போக்கில்
தழுவிச் செல்லும் தென்றலாய்
தடவிச் செல்லும் மெல்லிசை மழையாய்
ஊடுறுவிச் செல்லும் மென் குளிராய்
என்னென்னவோ எண்ணங்கள்
எந்த இசைக்கும் உட்படாத அபூர்வ ராகமாய்
எனக்குள் நீ மீட்டிய வீணை
இன்னும் மறக்க முடியவில்லை.. அந்த இன்னிசையை!

"இது உங்களுடையதா?"
கேட்டது நீ
"நீ என்னுடையவளா?"
இது நான்!
என்ன கேட்டால்.. என்ன சொல்கிறான்!
விளங்காமல் குழம்பிய உன் முகம்
பின்னர் அதில் ஒரு கோபம்
அது மெல்ல மாறி ஆச்சரியம்
ஏதோ புரிந்தது போல ஒரு புன்முறுவல்
சற்றே பூசிக் கொண்ட வெட்கம்
விழிகளில் தெறித்தது அபிநயம்
இமைக்காமல் பார்த்த என் கண்கள்
தவிர்க்க முயன்று தடுமாறி, முடியாமல் போய்
"என்ன சொன்னீர்கள்?"
விளக்கம் கேட்டபோது மீண்டும் ஒரு வெட்கம்
எனக்குள் கூடிப் போனது தைரியம்
"என்னுடையவளாக நீ வருவாயா?"
... எழுந்து நீ ஓடியபோது
ஓ.. தென்றல் இப்படித்தான் தவழ்ந்து போகுமா!

இடியே இல்லாத மழையாக 
இப்படித்தான் ஆரம்பித்தது நம் பேச்சு
அதன் பிறகு அப்படியே மாறிப் போச்சு நம் மூச்சு
உனக்காக நானும்
எனக்காக நீயுமாய்
சுவாசித்த நொடிகள்..
இருவரும் இணைந்து வாசித்த கவிதைகள்
எழுதித் தீர்த்த கடிதங்கள்
ஒவ்வொரு நொடியும்
எங்குமே கேட்கப்படாத 
ஒரு பேரிசையாக
மறக்க முடியாத பேரானந்தம்
மனதுக்குள் அன்று பெய்த மழை
இன்றும் கூட ஓயாத அடை மழையாக!

(பயணங்கள் முடிவதில்லை)

Part 1