கந்துவட்டி கமலா (ஒரு நிமிடக் கதை - 12)
- பூரணவள்ளி சேகர்
தன் கணவன் கைவிட்ட நாள் முதல் தன் ஒரேயொரு மகன் கண்ணன் ஒரு கண்ணாகவும் மற்றும் தான் செய்து வரும் வட்டித் தொழில் மறு கண்ணாகவும் நினைத்து வாழ்ந்து வந்தாள் கமலா.
யார் எந்த நேரத்தில் பணம் கேட்டு வந்தாலும் மறுப்பின்றிக் கொடுக்கும் கமலா வட்டியில் மட்டும் ஒரு ரூபாய் கூட விட்டுத் தர மாட்டாள்.
படிப்பறிவில் குறைந்தவளாய் இருந்தாலும் பட்டறிவிலும் பணம் பற்றிய அறிவிலும் கமலாவை விஞ்ச யாரும் இல்லை.
தன் மகன் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்பதே அவளின் நோக்கம். பணம் வாங்கியவர்கள் கமலாவின் ஆளுமைக்குப் பயந்து சரியான நேரத்தில் வட்டியைக் கொடுத்து வந்தனர். கமலாவைக் கல் நெஞ்சக் காரி என்று அவளின் பின்னால் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.
அவர்களின் பக்கத்துத் தெருவில் வசித்துவரும் தேவி மிகவும் இளகிய மனம் படைத்தவள். அனைவருக்கும் ஓடிச் சென்று உதவுவாள். தேவியின் இதயத்தில் இரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் சிறு ஓட்டை ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் தேவி.
தேவியின் இதயம் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மிருதுத் தன்மை இழந்து வருகிறது என்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஊரில் உள்ள அனைவரும் கமலா மற்றும் தேவி ஆகிய இருவரையும் பற்றிப் பேசினர். தேவியின் இரக்க சுபாவம் மற்றும் கமலாவின் கல் நெஞ்ச செயல் பற்றிப் பேசினார்கள்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சென்ற கமலா திடீரென எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் ஓரமாகச் செல்லத் திரும்பினாள்.
கால் இடறி அருகில் இருந்த மின் கம்பத்தில் முட்டி கீழே கிடந்த பெரிய கல்லின் மீது விழுந்தாள். தலையில் பலத்த காயம். சுய நினைவு போனது. கமலாவைச் சோதித்த மருத்துவர் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறினார்.
கண்ணன் கமலாவின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தான். கல் நெஞ்சக் காரி என்று அழைக்கப்பட்ட கமலாவின் தாமரை போன்ற மெல்லிய இதயம் தேவிக்கு பொருத்தப்பட்டது.
கந்துவட்டி கமலா என்பது மாறி கொடையாளி கமலா என்று அனைவராலும் நினைக்கப்பட்டாள்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)