கார்த்திகையில்!
Dec 04, 2025,04:00 PM IST
- கவிதா உடையப்பன்
வான் நட்சத்திரங்களை மண்ணில் கண்டேன்
வாசல் தோறும் வாய்மையாய் ஒளித்ததடி!
விண்மீன்களை கைகளால் தீண்டினேன்
வீசுமது தென்றல் கார்த்திகை மாதமடி!
கோலத்தோடு அழகாய் கதைத்தேன்
காலமே கலையாய் நின்றதடி!
வண்டுகள் என்னையே சுற்றிவர
வாடாது சுகந்தம் வீசினேனடி !
உள்ளக் கூம்புகளை கொளுத்தினேன்
கள்ளம் கபடங்கள் ஒழிந்ததடி!
அகல் விளக்கினுள் உயிராய் திரிந்தேன்
அண்டமே ஆற்றலுடன் மிளிர்ந்ததடி!
நாடிகளை ஒருமுகப் படுத்தினேன்
தேகமே "ஜோதியாய்" ஜொலித்ததடி !
நெய் உருகி தீபத்திற்கு துணை ஆனது
மெய் உருகி பிரம்மத்திற்கு இணை ஆனது!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)