திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
கரூர்: கரூர் கோடங்கிப்பட்டியில் திமுகவின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு திமுகவினர் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
திமுக முப்பெரும் விழா கரூர் அருகே கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கியமான நாட்களை கொண்டாடும் விதமாக இந்த விழா நடக்கிறது. விழாவில் கட்சிப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கி உரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
செப்டம்பர் மாதம் திமுகவுக்கு முக்கியமான மாதம். இந்த மாதத்தில்தான் தந்தை பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்தனர். மேலும் திமுக கட்சியும் இந்த மாதத்தில் தான் தொடங்கப்பட்டது. இந்த மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து திமுக ஒவ்வொரு வருடமும் முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.
இந்த வருடம் கரூர் அருகேயுள்ள கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட செயலாளர் வி. செந்தில்பாலாஜி வரவேற்புரை நிகழ்த்துகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டலங்களில் சிறப்பாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்குகிறார். மேலும் அவர் விழாவில் உரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா, ஐ. பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
முப்பெரும் விழாவில் சுமார் 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருதும், சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருதும், சோ.மா. ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட உள்ளன. குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், மருதூர் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருதும், பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் விருதும் வழங்கப்படுகிறது.
விழாவில் "கட்சிப்பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கி, விழா பேரூரை ஆற்றுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு சான்றிதழும், பண முடிப்பும் வழங்கப்படும்.
முப்பெரும் விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்திருந்த அறிக்கையில், 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா. எனவே முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றிடுமாறு தி.மு.க.வினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.