கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. சூடு பிடித்தது சிபிஐ விசாரணை.. இன்ஸ்பெக்டரிடம் முக்கிய விசாரணை

Su.tha Arivalagan
Oct 31, 2025,05:15 PM IST

சென்னை: நடிகர் விஜய்யின் கட்சி நடத்திய பேரணியில் 41 பேர் உயிரிழந்த கரூரில் நடந்த சோகம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிபிஐ குழு தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. கரூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சிபிஐ டீம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.


ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான இந்தக் குழு, இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, தேவைப்பட்டால் கரூரில் உள்ள விபத்து நடந்த இடத்திற்குச் செல்லவும் முடிவு செய்யும். இந்த சோகமான சம்பவம் எப்படி நடந்தது என்பதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இந்த குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சுமித் சரண் மற்றும் சோனல் வி மிஸ்ரா ஆவர்.


கரூர் துயரச் சம்பவம் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று நடிகர் விஜய்யின் கட்சியான தமிழ் வெற்றிக் கழகம் நடத்திய பிரம்மாண்ட பேரணியின் போது நடந்தது. பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறைதான் முதலில் விசாரித்து வந்தது. பின்னர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக அக்டோபர் 13 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் சென்னை அமர்வு இந்த வழக்கை கையாண்ட விதம் குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. விஜய்யையும் தவெக கட்சியையும் விசாரிக்காமல் அவர்களுக்கு எதிராக எதிர்மறையான கருத்துக்களை உயர்நீதிமன்றம் கூறியதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


மேலும், கரூரில் நடந்த விபத்து தொடர்பான வழக்கு மதுரைக் கிளைக்கு உட்பட்டதாக இருந்தும், சென்னை அமர்வு ஏன் இந்த வழக்கை விசாரித்தது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் நிலுவையில் இருந்தபோது, உயர்நீதிமன்றம் ஏன் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்தது என்றும் நீதிமன்றம் கேட்டது.


தற்போது உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக் குழுவில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண் மற்றும் சோனல் வி மிஸ்ரா உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்த குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


சிபிஐ விசாரணையின்போது அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  கூட பரிந்துரைக்கப்படும். இது நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே தற்போது சிபிஐ விசாரணை சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணை மற்றும் அவர்கள் அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தற்போது விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. படிப்படியாக தனது விசாரணையை அது அதிகரிக்கும் என்று தெரிகிறது. இன்று இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் சிபிஐ குழு விசாரணை நடத்தியது. இதற்கிடையே, இந்த வழக்கு விரைவில் மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.