கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது
கரூர்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜை கைது செய்து, அக்.14 ஆம் தேதி வரை சிறையிலடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் கடந்த 27ம் தேதி விஜய்யின் பிரச்சார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிகளவில் மக்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் கரூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்தியது. இச்சம்பவம் தொடர்பாக, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக, நீதிபதி பரத்குமார் அவர்களை விசாரித்தார்.
கட்சியின் தலைவர் விஜய் நேரத்தை கடைபிடிக்காததே விபத்துக்கு காரணம். கூட்டம் அதிகம் உள்ளது வாகனத்தை வேகமாக இயக்குங்கள் என்று சொன்னபோது மாவட்ட நிர்வாகிகள் வேண்டுமென்றே வாகனத்தை மெதுவாக இயக்கச் செய்தனர். மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு மாற்று பாதையில் வாகனம் இயக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட இடத்தை வாகனம் அடைந்த பின்னரும் வாகனத்தை முன்னோக்கி நகர்த்தி நிர்வாகிகள் விதி மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர் போலீசார்.
விஜய் வாகனத்தை சுற்றி பேரிகார்டு அமைக்க அனுமதி கோரினோம். விஜய் வாகனத்தை சுற்றி பேரிகார்டு அமைக்கப்படவில்லை. 4 மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்ததால் சமாளிக்க முடியவில்லை. நெருக்கடி கால வழி எதுவும் இல்லை. சென்டர் மீடியன்களை அகற்றியிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது என்று தவெக வழங்கறிஞர்கள் வாதிட்டனர்.
இவ்வாறாக இரு தரப்பு வாதங்களையும் கேட் நீதிபதி, காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை என்ற சூழ்நிலையில, குறைந்த அளவு கூட்டம் வரும் என எப்படி கணக்கிட்டீர்கள் என கேள்வி எழுப்பியதோடு, விஜய் டாப் ஸ்டார், அவரை முதல்வர் மற்றும் பிற கட்சி தலைவர்களுடன் ஒப்பிட முடியாது. விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு 10,000 பேர் தான் வருவார்கள் என கணித்ததே தவறு என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜை 15 நாட்கள் சிறையிலடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.