விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

Sep 30, 2025,02:21 PM IST

- சஹானா


கரூரில் கடந்த செப்.,27 (சனிக்கிழமை) தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்யும்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் அது தொடர்பான பேச்சுகளும், கட்சிகளுக்குள் பலரும் மாறி மாறி தூற்றப்படும் பழிகளும், வேகமாக பரவும் கட்டுக்கதைகளும், வதந்திகளும் ஓய்ந்தபாடில்லை. நடந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை தான். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றவர்கள் யார், யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.


இதில் திமுக, அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருந்துள்ளனர். இது அரசியல் நாடகம் என பலரும் கூறினாலும், அது உண்மையாகவே இருக்கட்டும்... ஆனால் அங்கு அவர்களின் நம்பிக்கைக்காக ஆறுதலுக்காக நின்றிருந்தனர். விஜயை காண வந்த கூட்டத்தினரில் பெரும்பகுதியினர் நிச்சயம் விஜய் ரசிகர்களாக இருப்பார்கள் என்பது மறுப்பதற்கில்லை. எனவே, இறந்தவர்களும், காயமடைந்தவர்களுமே தன் கட்சியினர் தானே, தன்னை பார்க்க வந்தபோது நடந்த விபத்து தானே என விஜய் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்க வேண்டும். அவர் இல்லாவிட்டாலும், அவரின் உத்தரவின்பேரில் அவரது கட்சி நிர்வாகிகளாவது இருந்திருக்க வேண்டும்.




ஆனால், 2 நாட்கள் ஆகியும் சிவப்பு, மஞ்சள் துண்டுப்போட்ட அக்கட்சியின் தன்னார்வலர்கள் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கவும், ஆறுதல் கூறவும் இல்லை. இதுவே, அரசியல்வாதியாக விஜய் பற்றி மக்களுக்கு நெகட்டிவ் பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.


யார் சதி செய்திருந்தாலும், விபத்திற்கு பிறகு நாடகம் நடித்திருந்தாலும், இவ்வளவு பெரிய துயருக்கு பின்னாவது விஜய் அல்லது அவரது கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றிருக்க வேண்டும். அங்குள்ள மக்கள், இதையே கேட்கின்றனர், எதிர்பார்க்கின்றனர் என்பது வெளிவரும் பல வீடியோக்களில் தெரியவருகிறது. அதேசமயம், அக்கட்சியினரான ‛விர்ச்சுவல் வாரியர்ஸ்’ சமூக வலைதளத்தில் ஆளும் திமுக அரசு, குறுகலான இடத்தை ஒதுக்கியதாகவும், சதி செய்ததாகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது பற்றி, விசாரணை நடத்திவரும் ஓய்வுப்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வெளியிடப்போகும் அறிக்கையிலேயே தெரியவரும்.


இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் விஜயோ, தவெக நிர்வாகிகளோ இதுவரை மவுனமாக இருந்து வருகின்றனர். இதெல்லாம் மக்களிடம் நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை விஜய் தரப்பு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதேசமயம், இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது தவெக மீதும், விஜய் மீதும் படிந்து வரும் நெகட்டிவ் இமேஜை உடைக்க இன்ப்ளூயன்ஸர்கள் மூலம் செய்திகளை பரப்பும் முயற்சி ஒன்று நடந்து வருவதாக சொல்கிறார்கள்.


சில சமூக வலைதளங்களில், விஜய் பக்கம் தாங்கள் நிற்பதாகவும், இந்த சம்பவத்தில் திமுக சதி செய்துவிட்டதாகவும், குறுகலான பாதை கொடுத்து விபத்துக்கு திமுக காரணமாகிவிட்டது என்றும், முதலமைச்சர், முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோரை நேரடியாகவே குற்றம்சாட்டியும், வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.


அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள தங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் சில வீடியோக்களை பதிவேற்றி, இதனை உங்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுப்பி ஸ்டேட்டஸ் வைக்க சொல்லி வலியுறுத்தி வருகின்றனராம். இதனால், ஸ்டேட்டஸ் பார்க்கும் மற்றவர்களுக்கும் விஜய் மீது கரிசனம் ஏற்படவும், விஜய் மீது படர்ந்துள்ள நெகட்டிவ் கொடியை அகற்றவும் இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.


இது உண்மையா என்று தெரியவில்லை. சிலர் இதுபோன்று தங்களிடம் சிலர் அணுகியதாக வீடியோ போட்டு வருகின்றனர். இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது எந்த அளவுக்கு தவெகவுக்கு உதவும் என்று தெரியவில்லை.  இப்படியெல்லாம் பிஆர் வேலைகளைச் செய்வதை விட விஜய் நேரடியாக கரூருக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினாலே போதும் தானாக அவர் மீதான நெகட்டிவ் இமேஜ் உடைந்து தகர்ந்து போய் விடும். அதேபோல தனது தரப்பு தவறுகளையும் விஜய் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டால் அவர் மீது அனுதாபமும் வரும், ஆதரவும் பெருகும். ஆனால் இதையெல்லாம் விஜய்யிடம் எடுத்துச் சொல்ல அங்கு சரியான 2ம் நிலைத் தலைவர்கள் இல்லை என்பதுதான் மிகப் பெரிய கொடுமை!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!

news

அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

news

விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

news

மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

news

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

news

தங்கம் விலை சவரன் 90,000த்தை நெருங்குகிறது... இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

news

சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்