தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

Su.tha Arivalagan
May 09, 2026,01:24 PM IST

சென்னை: தாலியை கையில் வைத்துக்கொண்டு முகூர்த்தம்  முடிவதற்குள்  பெண் வீட்டாரை மிரட்டி ரத்தத்தை உரியும் வியாபாரி மாப்பிள்ளை தேவைதானா? என்று தவெக தலைவர் விஜய்க்கு நடிகை கஸ்தூரி அறிவுரை கூறியுள்ளார்.


தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் ஏகப்பட்ட சூழல்கள் பாடாய்ப்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டு மக்கள் விஜய் கட்சிக்கு 108 இடங்களில் வெற்றியைக் கொடுத்தபோதிலும் 10 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக இல்லாமல் போனதால், விஜய் கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை.


தற்போது வரை 16 பேரை அவர் திரட்டி விட்டார். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக இழுபறி செய்து வருகிறது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்  கூட படு வேகமாக முடிவெடுத்து ஆதரவு தெரிவித்து விட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் ஏன் இப்படித் தாமதம் செய்கின்றன என்று யாருக்கும் புரியவில்லை.




விசிக பல்வேறு கோரிக்கைகளை, நிபந்தனைகளை முன்வைத்து தவெகவுக்கு அழுத்தம் தந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த நிலையில் நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான கஸ்தூரி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.


அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தாலியை கையில் வைத்துக்கொண்டு முகூர்த்தம்  முடிவதற்குள்  பெண் வீட்டாரை மிரட்டி ரத்தத்தை உரியும் வியாபாரி மாப்பிள்ளை தேவைதானா? நல்ல மாப்பிள்ளையா என்றால் அதுவும் இல்லை. இந்த நிமிடம் வரை கொள்ளைக்கார கும்பலுடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் திருட்டு மாமாக்கள்.  நாளையிலிருந்து திருந்தவா போகிறார்கள்? உங்களை திருடனாக்கத்தான் முயற்சிப்பார்கள். 


காலில் விழுந்து, கடன் வாங்கி, காட்டிய இடத்திலல்லாம் கையெழுத்து போட்டு ...வீட்டையும் மானத்தையும் மனசாட்சியையும் அடகு வைத்து... எப்படியாவது  கல்யாணம் பண்ணியே ஆகணுமா?  பிளாக்மெயில் பேரம் பேசும்  அவர்கள் கேட்பதற்கெல்லாம் உடன்பட்டாலும்  நாளை உங்கள் பெண் நல்லா வாழ்ந்துருமா? மீண்டும் மீண்டும் மீண்டும் மிரட்டுவார்கள். 


இருப்பதையெல்லாம் பிடுங்கிக் கொள்வார்கள். திருடியாவது கொண்டா என்று கட்டாயப்படுத்துவார்கள். பெண்ணை வைத்து இன்னும் பொருள் கேட்பார்கள், பெண்ணை விற்றுக்கூட பொருள் தேடுவார்கள்.  இவர்கள் குற்றங்களுக்கு நீங்கள் பழிக்கு ஆளாவீர்கள்.


வேண்டாம்  இந்த பிழைப்பு. மக்கள் ஆசியுடன் நல்ல வாழ்க்கை அமையும். சரியான நிலையான வெற்றி கிடைக்கும். அவசரப்பட்டு அனைத்தையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் மறைமுகமாக விஜய்யைக் குறிப்பிட்டு அறிவுறுத்தியுள்ளார்.