கயிலை அறக்கட்டளை - சைவ சமயச் சொற்பொழிவாளர் பயிற்சித் திட்ட பட்டமளிப்பு விழா

Su.tha Arivalagan
Nov 21, 2026,01:43 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து செயல்படும் கயிலை அறக்கட்டளை சார்பில், 

உலகெங்கும் சைவ நெறியை விளங்கச் செய்யும் முயற்சியாக,  110 அடியார்கள் பங்கேற்ற இணையவழி சைவ சமயச் சொற்பொழிவாளர் பயிற்சித் திட்டத்தின் முதலாம் அணியினருக்கு பட்டமளிப்பு விழா இணைய வழியில் இன்று (21.11.2026) நடைபெறுகிறது.


சைவமும் தமிழும் உலகெங்கும் தழைக்க வேண்டும்; திருமுறை நெறியும் சைவ சித்தாந்தச் சிந்தனைகளும் அடுத்த தலைமுறையினரிடம் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் கயிலை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சிவ. கயிலை துரைசாமி அவர்கள் முன்னெடுத்துள்ள சைவசமயச் சொற்பொழிவாளர் பயிற்சித் திட்டம் சிறப்பான ஆன்மிக முன்னெடுப்பாகத் திகழ்ந்து வருகிறது.




இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் வாழும் 110 சைவ அடியார்கள் இணையவழியாக ஒன்றிணைந்து ஆறு மாத காலப் பயிற்சியில் பங்கேற்றிருப்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.


புவியியல் எல்லைகளைக் கடந்து சிவநெறி என்ற ஒரே ஆன்மிகப் பிணைப்பில் அடியார்களை இணைத்திருப்பது பாராட்டுக்குரியது.


கயிலை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சிவ. கயிலை துரைசாமி, M.Tech., MBA, Phd அவர்களின் வழிகாட்டுதலிலும், மலேசிய ஆசிரியை முனைவர் சிவ. வாசுகி முனியாண்டி, Ph.D (Inclusive Education), M.Ed., B.Ed. (Hons) அவர்களின் பயிற்றுவிப்பிலும் இச்சொற்பொழிவாளர் பயிற்சித் திட்டம் கயிலை அறக்கட்டளையில் உயர்ந்த சமூக சிந்தனையோடு எவ்வித கட்டணமுமின்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது.


சமய அறிவுடன் சிறந்த சொற்பொழிவுத் திறனையும் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கோட்பாட்டுப் பயிற்சியும், இணையவழி வினாடி வினாவும் நடைபெற்றன. சனிக்கிழமைகளில் வாசிப்பு, உச்சரிப்பு, குரல் வளம் மற்றும் உரையாற்றும் திறன் சார்ந்த நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


திருமுறைகளின் அருட்சிந்தனைகளையும், சைவ சித்தாந்தத்தின் உயரிய தத்துவங்களையும் மக்களிடம் எளிமையாக எடுத்துரைக்கக்கூடிய சொற்பொழிவாளர்களை உருவாக்குவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, இளைய தலைமுறையினரிடம் சைவத்தின் வாழ்வியல் நெறிகளையும், ஆன்மிக இலக்கியச் சிறப்புகளையும் கொண்டு சேர்ப்பதில் கயிலை அறக்கட்டளையின் இத்தகைய பயிற்சிகள் பெரும் பங்காற்றி வருகின்றன.


சமயச் சொற்பொழிவாளர் பயிற்சி திட்டத்தினுடைய முதலாம் தொகுதியின் ஆறு மாத காலப் பயிற்சியின் நிறைவாக 21.11.2026 அன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பயிற்சியாளர்களின் சொற்பொழிவுகளும், பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு இணையவழிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெறுகின்றன. இது பயிற்சியின் நிறைவாக மட்டுமல்லாமல், எதிர்காலச் சைவத் தொண்டிற்கான புதிய தொடக்கமாகவும் அமைகிறது.


திருமுறை ஒளியை உலகெங்கும் பரப்பி, சைவத் தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் கயிலை அறக்கட்டளையின் இம்முயற்சி, சைவ சமயத் தொண்டில் பாராட்டத்தக்க முன்னெடுப்பாகும்.


(கட்டுரை தகவல்: பி. சுப்புலட்சுமி பிரமநாயகம் MCA, MA, B.Ed., திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்.சென்னையில் ஆசிரியை மற்றும் தமிழ் எழுத்தாளராக இருக்கிறார். மயிலை அறக்கட்டளையின் மாணவி)