கேதார கெளரி விரதம்.. சிவபெருமானுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் முக்கியமானது

Swarnalakshmi
Oct 03, 2025,03:45 PM IST

கேதார கௌரி விரதம் சிறப்புகள்: சிவபெருமானுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் கேதார கௌரி விரதம் முக்கியமான விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த   விரதம் ஆகும். அம்மை அயனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீஸ்வரராக ஆனது இந்த விரத மகிமையினால் தான். இந்த கேதார கௌரி விரதத்தை புரட்டாசி மாதம் சுக்லபக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை அன்று முடிய மொத்தம் 21 நாட்கள் இந்த வருடம் கடைபிடிக்கப்படுகிறது என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. பல வீடுகளில் இந்த கேதார கௌரி விரதம் வெகு சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் அவர்களுடைய தாயாரோ அல்லது மாமியாரோ இந்த விரதத்தை எடுத்துக் கொடுத்த பிறகு இந்த பூஜை செய்ய துவங்குகின்றனர்.


கேதார கௌரி விரதத்தின் பிரசாதம் அதிரசம் ஆகும். வெல்லப்பாகு,பச்சரிசி, மாவு கலந்து செய்யப்படும் பக்ஷணம். இது பெண்கள் திருமணம் ஆகி செல்லும் பொழுது இந்த அதிரசத்தை கேதாரீஸ்வரர் பிரசாதமாக கொடுத்து அனுப்பும் வழக்கம் இன்றும் பல வீடுகளில் நடைமுறையில் உள்ளது.




கேதார கௌரி விரதத்தின் சிறப்புகள் : கேதாரம் என்பது இமயமலைச் சாரலை குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்று கூறுவார்கள்.இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்புலிங்கமாக கேதாரேஸ்வரர் தோன்றினார் என்று கூறப்படுகிறது. சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தனாரி ஆகவும், அர்த்தநாரீஸ்வரராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். திருமணம் ஆகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும், மங்களமாக இருக்க வேண்டியும்  திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும்,இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.


வயலில் ஆலமரத்தடியில் இருந்து அம்பிகை விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதார கௌரி விரதம் எனவும்,ஈசனை வழி படுகின்ற படியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் அழைக்கப்படுகிறது. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து 21 இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களை கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும் பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். சக்திஸ்வரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டு அந்த விரதத்தின் பலனாக சிவபெருமானின் இடது பக்கம் பாதியுடம்பை பெற்று அர்த்தநாரியாகவும்   அர்த்தநாரீஸ்வரராகவும்  ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும். இந்த நோன்பு லட்சுமி விரதம், அம்மன் விரதம்,கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைக்கின்றனர் .


கேதார கௌரி விரதம் மேற்கொள்வதனால் மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணைபிரியாத அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும் சகல சௌபாக்கியங்களும் நல்கும்.தம்பதியர் இருவரும் ஓர் உயிர் ஈருடலாக வாழும் வரம் பெற இது போன்ற விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க வேண்டும். ஆயுள் முழுவதும் தம்பதிகள் ஆதர்ஷ  தம்பதிகளாக வாழ உதவும் விரதம் இது.குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் இந்த விரதத்தினை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை பெற்று சுபிட்சமான வாழ்க்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.


மேலும் இன்று பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுபவர்களுக்கு தென் தமிழ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.