சகல நன்மை தரும் அற்புதமான இராஜகனி எலுமிச்சை
- ஸ்வர்ணலட்சுமி
எலுமிச்சை தொடர்பான பழமொழிகள் மற்றும் சுவாரஸ்யமான கருத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றிய சிறு தகவல்களை இப்பதிவில் காண்போம்.
ஆங்கிலப் பழமொழியும் தமிழாக்கமும் :
"When life gives you lemons, make lemonade" "வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சையைத் தந்தால் அதை எலுமிச்சை சாறாக மாற்றிக் கொள்ளுங்கள் ".
விளக்கம்: வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை( இங்கே புளிப்பு) நேர்மறையாக மாற்றி, வெற்றியாக (இனிப்பு) கொள்ள வேண்டும் என்பதாகும்.
அவ்வப்போது கோடை மழை எட்டிப் பார்த்தாலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் நாம் தினமும் எலுமிச்சை சாறு அருந்துவது அவசியம். எலுமிச்சை வைட்டமின்-C நிறைந்த நல்ல ஆரோக்கியத்திற்கு உகந்த கனி.
"பித்தத்திற்கு எலுமிச்சை" எலுமிச்சை சாறு அருந்துவதனால் பித்தம் அகன்று,வாந்தி மயக்கம் போன்றவற்றை குணப்படுத்தும் என்பதை குறிக்கும் மருத்துவ கருத்து.
கோடை விடுமுறைகளில் பலர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்வது வழக்கம். அவர்களுக்கு கொண்டை ஊசி (Hairpin bends)வளைவுகளில் பயணிக்கும் பொழுது வாந்தி வரும்.அதற்கு, உடனே எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டு முகர்ந்து பார்ப்பது இதனால்தான்.
பெயர்க்காரணம் :
எலி மிச்சம் வைத்த கனி. அதாவது எல்லா பழங்களையும் எலி கடித்து விடும்.ஆனால், எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததால் தானோ என்னவோ, இந்த பழத்திற்கு "எலுமிச்சை" என்று பெயர் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
"எலுமிச்சை தேவ கனி" "எலுமிச்சை ஒரு அதிசயக்கனி " இவை பழமொழிகள் அல்ல. அனைவரும் சாதாரணமாக கூறும் வாக்கியங்கள்.
எலுமிச்சை- அற்புதக்கனி:
எல்லா காலங்களிலும் எலுமிச்சம் கிடைக்கும். "இராசக்கனி "என்றும் பித்தம் குறைப்பதால் 'பித்தம் முறி மாதர்' 'என்றும் "அற்புதக்கனி" என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்கி சீரான சுவாசம் தருகிறது.
வைட்டமின் சி (vitaminC ) நிறைந்த எலுமிச்சைச் சாறை பருவதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
வயிற்று வலி,வயிற்று உப்புசம், கண் வலி, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை சரியாக்கும் எலுமிச்சை சாறு. உயர்ந்த கிருமி நாசினி, பொட்டாசியமும் இதில் உள்ளது.
அதிக எடை அன்பர்கள், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பருகுவது சிறப்பு. உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
'கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை. கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும்.
பயன்கள்:
1. உடல் நச்சுக்களை வெளியேற்றும்.
2. தலைவலி தீர்க்கும்,
3. மலச்சிக்கல் விலகும்.
4. தொண்டை வலியை போக்கும்.
5. வாந்தியை நிறுத்தும்.
6. வாய் துர்நாற்றத்தை போக்கும்
7. சரும நோய்களை குணப்படுத்தும்.8. வாயுவை அகற்றும்.
9. பசியை உண்டாக்கும்.10. விரல் சுற்றிற்கு உதவும்.
11.யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.
12. விஷத்தை முறிக்கும்.
13. தேள் கடிக்கு உதவும்.14. மஞ்சள் காமாலையை நீக்கும்.
15.வீக்கத்தை குறைக்கும்.
16. எலுமிச்சம் பழம் நீரிலும்,காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தை தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள பியோபிளேன் என்ற சத்தில் உள்ளது.
17.தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தை தாங்கி தப்பித்துக் கொள்ள இயலும்.
18.புற்றுநோய் காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தின் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.
19. விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சம் பழச்சாறை பிழுந்து சர்க்கரை போட்டு உட்கொண்டால் உடனடியாக எனர்ஜி கிடைக்கும்.
20. உண்ணா விரதம் இருப்பவர்கள், விரதம் மேற்கொள்பவர்கள் எலுமிச்சம் பழச்சாறை அருந்திவிட்டு உணவு உட்கொண்டால் அஜீரண பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
இறைவழிபாட்டிலும் எலுமிச்சை:
ராகு காலத்தில் துர்கா தேவிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது வழக்கம். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை 'தேவகனி' என்பதால் தான்.
மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு.பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால், எலுமிச்சையில் மட்டும் எவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி இதர கனிகளை காட்டிலும் எலுமிச்சை கனிக்கு அதிகம்.
எலுமிச்சையின் தனித்துவமான சுவை (புளிப்பு சுவை) காரணமாக பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.