- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
சிறுவயதில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் எப்போதும் மனதிற்கு நெருக்கமானவை. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த விடுமுறை நாட்கள் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. அப்போது எங்கள் தெரு நண்பர்களுடன் சேர்ந்து கொய்யாத் தோட்டம், திராட்சைத் தோட்டம், கடலைக்காடு எனச் சுற்றித் திரிந்து பழங்களையும் நிலக்கடலையையும் வாங்கி ருசிப்பதே எங்களின் தினசரி வழக்கமாக இருந்தது.
அப்படி ஒரு கோடை விடுமுறையில், நாவல் பழம் பொறுக்குவதற்காக எங்கள் ஊர் குடகனாற்றின் கரைக்குச் சென்றோம். ஆற்றின் இருபுறமும் அடர்த்தியான நாவல் மரங்கள் நின்றிருக்கும். மரத்தின் உரிமையாளர்கள் பழங்கள் வீணாகாமல் இருக்க, மரத்தடியைச் சுத்தமாகப் பெருக்கி வைத்திருப்பார்கள். உதிர்ந்து கிடக்கும் அந்தப் பழங்களைப் பார்க்கும்போது, யாரோ ஊதா நிறப் போர்வையை விரித்து வைத்தது போலவும், திராட்சைப் பழங்கள் கொட்டிக் கிடப்பது போலவும் அவ்வளவு அழகாக இருக்கும்.
நாங்கள் பழம் பொறுக்க ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கினோம். அது என் அப்பாவின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மரம். அவர்கள் சிறுவயதில் எனக்கு 'செவ்வணத் தொட்டு' வைத்தவர்கள் (சர்க்கரைத் தண்ணீரை வாயில் விட்டு, 'என் புத்தியை விட்டு உன் புத்தியைப் பிடி' என்று சொல்லிச் செய்யும் ஒரு சடங்கு). அவர்கள் கொஞ்சம் கறாராகப் பேசக்கூடியவர்கள்.

எங்களைப் பார்த்த உடனே, "இங்க யாரும் பழம் பொறுக்கக் கூடாது, கிளம்புங்க! ஒருத்தர் மட்டும் வந்தா பரவாயில்லை, நீ ஒரு கூட்டத்தையே கூட்டிட்டு வந்திருக்க. இத்தனை பேரும் பொறுக்கினா அப்புறம் நான் கடைசியில் எதை விற்பது? போங்க... போங்க!" என்று விரட்டினார்கள்.
நான் என் நண்பர்களிடம், "டேய் வாங்கடா, இந்த மரம் இல்லையென்றால் அடுத்த மரத்திற்குப் போகலாம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அப்போதும் அவர் விடாமல், "ஏய் இங்க பாருங்கடா... டேவிட் மகள் எல்லாரையும் கூட்டிட்டு வந்து நாவல் பழம் பொறுக்கப் பார்க்கிறாள்" என்று சத்தம் போட்டார். "பழம் பொறுக்க விடவில்லை என்றால் பரவாயில்லை, அதற்கு ஏன் இப்படிச் சத்தம் போடுகிறார்கள்?" என்று நினைத்துக் கொண்டே நாங்கள் அடுத்த மரத்திற்குச் சென்றோம்.
அன்று இரவு யாரும் எதிர்பார்க்காத வகையில் பலத்த மழை பெய்தது. மறுநாள் காலையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்தப் பெருமழையில் எங்கள் ஊரில் இருந்த பல நாவல் மரங்கள் வேரோடு சாய்ந்து ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. பல வருடங்களாக நின்றிருந்த பெரிய மரங்கள் கூட முறிந்து விழுந்தன.
யார் என்னை அன்று பழம் பொறுக்கக் கூடாது என்று விரட்டினார்களோ, அவர்களுடைய மரமும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இது தெரியாமல், அன்று மதியம் நான் ஆற்றங்கரை ஓரம் இருந்த என் தாத்தா-பாட்டி (அப்பாவின் பெற்றோர்) வீட்டிற்குச் சென்றேன். அப்போது அந்த உரிமையாளர் என்னைப் பார்த்து, "டேவிட் மகளே... உன்னை நாவல் பழம் பொறுக்க விடவில்லை என்பதற்காக, உன் சாபத்தில்தான் என் மரம் ஆத்தோட போயிடுச்சா?" என்று கேட்டார்.
நான் அதிர்ச்சியாகி, "ஐயோ! நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லையே... இந்த மரம் இல்லைனா அடுத்த மரத்துக்குப் போகலாம் என்றுதான் சொன்னேன். உங்கள் மரம் இப்படி ஆகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை" என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
அன்றுதான் ஒரு பெரிய உண்மையை நான் உணர்ந்தேன். மனிதர்களாகிய நாம் எவ்வளவுதான் 'என்னுடையது, உன்னுடையது' என்று போட்டி போட்டாலும், இயற்கைச் சீற்றத்தின் முன்னால் நாம் அனைவருமே ஒன்றுமே இல்லை என்பதுதான் அந்த எதார்த்தம். பல ஆண்டுகள் கழிந்தாலும், அந்தச் சம்பவம் பசுமரத்தாணி போல இன்றும் என் நினைவில் வந்து செல்கிறது!
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}