என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

May 02, 2026,03:12 PM IST

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னும் 2 நாட்கள் இருக்கையில்,  அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களின் அதிருப்தியையும், தங்களின் மன வருத்தங்களையும் ஓப்பனாக பேச துவங்கி உள்ளனர்.


த.வெ.க-வுக்கு சாதகமான அலை: 


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தாக்கம் குறித்து முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார். 


"த.வெ.க ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அது வலிமையான சக்தியாகத் திகழும் என்பதோடு, பல ஆச்சரியங்களையும் ஏற்படுத்தக்கூடும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 


குறிப்பாக, மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே த.வெ.க-வுக்கு ஆதரவாக ஒரு சாதகமான அலை வீசுவதாகவும், அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். மூத்த திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான வைகோ, தவெக வலிமையான சக்தியாக மாறியிருப்பதாக கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இடதுசாரிகளைப் புறக்கணிக்கும் திமுக :




மற்றொரு புறம், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். 


இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். 


"இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரத்தைத் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பதுதான் உண்மை" என்று அவர் கூறியிருப்பது, ஆளும் கூட்டணியில் உள்ள விரிசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கொடுப்பதைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிரங்கமாகவே எதிர்த்திருந்தன என்பது நினைவிருக்கலாம்.


ஆட்சியில்  பங்கு கேட்கத் தயாராகும் தேமுதிக: 


மறுபக்கம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து தனது நிலைப்பாட்டைத் தள்ளிப்போட்டுள்ளார். 


தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் கூட்டணிகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் எழும் நிலையில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து மே 4-ம் தேதிக்குப் பிறகு பதில் சொல்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 


இது தேமுதிக எந்த மாதிரியான வியூகத்தை வகுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை 10 பேரும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வோம் என கூறி வந்த பிரேமலதா, தற்போது முடிவுகளை தேர்தல் ரிசல்டிற்கு பிறகு என சொல்ல துவங்கி உள்ளார்.


ஒரு வேளை தொங்கு சட்டசபை அமைந்தால், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கோரினால், தேமுதிகவும் அந்த நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.


கேட்ட தொகுதிகளை ஒதுக்கவில்லை :


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  "கூட்டணியில் எங்கள் கட்சிக்கு போதிய தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் சரியாக வேலை செய்யவில்லை" என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.


அத்தோடு நில்லாமல், திமுக, அதிமுகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பெருவாரியாக தவெக  பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த பிறகும் திமுக நிச்சயம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையுடன் பேசி வந்த கூட்டணி கட்சிகள். தற்போது திமுக.,விற்கு எதிரான மனநிலை, அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


அப்படியானால் தவெக.,வின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை திமுக கூட்டணியினர் ஒப்புக் கொள்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஆனால் மேட்டரே வேற என்று அரசியல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதாவது திமுக எப்படியாவது ஆட்சியமைக்கும். ஒரு வேளை தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சியில் பங்கு பெற கூட்டணிக் கட்சிகள் தீர்மானித்து விட்டன. தொகுதிப் பங்கீடு போல இருக்கக் கூடாது. ஆட்சியில் கண்டிப்பாக பங்கு பெற்று விட வேண்டும் என்ற வேகத்தில் அவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இப்போதே இப்படி திமுக குறித்த அதிருப்தியை பொது வெளியில் அவர்கள் பகிர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.


மே 4ம் தேதிக்குப் பிறகு மேலும் பல புகைச்சல்களை பல கட்சிகளிலும்  காணலாம் என்று எதிர்பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்